நீலமலை ரகசியம் – நிறைவு

மெட்ராஸ் பேப்பரில் தொடராக எழுதி வந்த ‘நீலமலை ரகசியம்’ இன்றோடு (பிப்ரவரி 10, 2026) நிறைவுபெறுகிறது. நீலகிரியின் வரலாற்றை ஐந்து வயதிலிருந்து கதைகளாகக் கேட்கத் தொடங்கினேன். படுகஹள்ளியிலிருந்து, துருக்க மகாராஜாவால் விரட்டப்பட்டு ஹெத்தையம்மன் நீலகிரிக்கு நுழைந்த கதையைச் சொல்லித் தூங்க வைத்திருக்கிறார்கள்.

பவர் ஹவுஸுக்குச் செல்லும்போது எப்படி ஐந்து மின் நிலையங்களும் ஆழ் வெளியைத் தாண்டி, மலைகளைக் குடைந்து, ஆறுகளை மடைமாற்றி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வரைபடம் காட்டி விளக்குவார்கள். அதனைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் ஆரம்பம் ஒரே ஒரு வெள்ளையன் ஒற்றைக் குதிரையை எடுத்துக்கொண்டு அத்தனை மலைகளையும் அளந்து கொண்டு போனதுதான் என்று வியந்து சொல்வார்கள்.

விதம் விதமாக மலர்ந்து செழித்துக் கொண்டிருக்கும் பூங்காக்களுக்குப் போகும்போதெல்லாம், காட்டு மலர்கள் தாண்டி இத்தனையும் பூக்க ஒரு ஸ்வீடன் காரனின் கனவுதான் காரணம் என்று சொல்லி மகிழ்வார்கள். ஏரியில் படகில் செல்லும்போதெல்லாம், இப்போ நாம பாக்குற ஊட்டி முழுக்கவே ஏரியாத்தான் இருந்துச்சு தெரியுமா என்று கதை சொல்ல ஆரம்பிப்பார்கள். அனைத்திற்கும் ஆதாரமாய் இதனைக்கனவு கண்ட ஜான் சல்லிவனைப் பற்றிய எல்லோருமறிந்த கதை சொல்லப்படும் . ஷூட்டிங் மேட்டுக்குப் போனால் ஒரு கதை. பைக்காரா ஏரிக்குப் போனால் இன்னொரு கதை. குன்னூரில் பேருந்திற்குக் காத்திருக்கும்போது ஒன்று. முதுமலையில் யானை பார்க்கப்போகும்போது மற்றொன்று.

இப்படி நீலகிரிக் கதைகள் பலவிதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நூலகங்களின் கதவுகள் எனக்குத் திறக்கப்பட்ட பிறகு ஆதாரங்களுடன் அவற்றைப் படித்துத் தெளிந்திருக்கிறேன். நினைவு இல்லங்கள், கல்லறைகள், பாரம்பரியக் கட்டடங்கள், அருங்காட்சியகங்கள் எனக் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் உள்ள இடைவெளிகளைக் கற்றுத் தெளிந்துகொண்டேன்.

இவை அனைத்தையும் தொகுத்து எழுத அமர்ந்த பின்னரும், வாசிக்க ஏராளமாய் இருந்தன. பரிசீலிக்கப் பழைய ஆவணங்கள் தேடி ஓட வேண்டியிருந்தது. நினைவுச்சின்னங்கள் ஒவ்வொன்றிலும் வரலாறு எழுதப்பட்டிருந்தது. ஒன்பது மாதத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் நீலகிரிக்குச் சென்றேன். பெருமழை, கொடும்பனி, நெரிசல் நிறைந்த கோடை, மெல்லிய குளிர் நிலவும் இளவேனில் என நான்கு பருவங்களையும் தகவல் சேகரித்தபோது அனுபவித்திருந்தேன்.

எழுதுவதன் வழியாக மீண்டும் சில நூற்றாண்டுகளை வாழ்ந்து கடந்தேன். வாரந்தோறும் வந்த மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும், நான் கதை கேட்டபோது ஏற்பட்ட தாக்கம், வாசகர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதைப் புரியவைத்தது. இனி இது புத்தகமாய் வெளிவந்து, இன்னும் பரந்த வாசகர் பரப்பைச் சென்றடையும். அவர்கள் ஒவ்வொரு முறை மலையேறும்போதும் அதன் நெடிய, மர்மங்கள் நிறைந்த, அமானுஷ்யம் தழுவிய, போராட்டங்கள் கடந்த நீலகிரியின் வரலாற்றை நினைவு கூர்வார்கள் என்பதில் ஐயமே இல்லை.

Leave a comment