ஆற்றொழுக்கும் பகடையாட்டமும்

நேற்று எங்கள் bukpet எழுத்தாளர் குழுவில் புதிதாகச் சிறுகதை எழுதத் தொடங்கியிருக்கும் ஒருவர், எழுதுவதில் தனக்குள்ள குழப்பங்களைப் பகிர்ந்துகொண்டபோது கீழ்க்கண்டதில் முதலிரண்டு விஷயங்களை அவருக்குச் சொன்னேன். அதை இன்னும் நீட்டித்து, இன்னும் மூன்று முக்கிய விஷயங்களைத் தொகுத்து எனக்காக எழுதி வைத்துக்கொண்டேன்.

  1. எழுத்துக்கு அடிப்படை வாசிப்பு. ஆசிரியர் வகுப்பில் வரிசைப்படுத்திய, அவசியம் படிக்கவேண்டிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளின் பெயர்களைக் குறித்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்நாள் முழுதும் வாசித்தாலும் தீராதது அந்த வரிசை. அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினசரி குறைந்தபட்சம் ஐம்பது பக்கமேனும் வாசியுங்கள். அது இல்லாமல் இது இல்லவே இல்லை.
  2. சிறுகதை அல்லது கதை என்பது மொழியும், கற்பனையும்
    இணைந்து ஆடவேண்டிய பகடையாட்டம். அதற்கு வாசிப்பும், உங்கள் வாழ்வனுபவமும் உதவும். எப்போதும் தாயம் விழாதுதான். ஆனால் கட்டங்களுக்கு முன்பு கவனத்தைக் குவித்து வைத்துக்கொண்டிருப்பதுதான் முக்கியம். ஆகவே எழுதும் மனநிலையை ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் குவித்து வைத்திருங்கள்.
  3. இதைத்தாண்டி ஒவ்வொரு நாளும் எழுதும் கதை / பத்திக்கான கருப்பொருளை அந்த நாளைத் தொடங்கும் கணத்திலிருந்தே படிப்படியாக உங்கள் மனத்தில் சொல்லிப்பார்த்தல், அதன் ஒவ்வொரு வார்த்தையையும் மாற்றி யோசித்தல், படிப்படியாக வளர்த்தெடுத்தல் முதலியவற்றைப் பயிற்சி செய்யலாம். முதற்சொல்லைக் கணினியில் எழுதுவதற்கு முன்னே மனத்தில் எழுதிப்பார்த்தல் பெரிதும் உதவும். உட்கார்ந்த உடனேயே சொற்சிக்கலின்றி பத்தியை நிறைவு செய்துவிடமுடியும். முதல் வாக்கியத்தை மட்டும் எழுதி வைத்து உட்கார்ந்து யோசிப்பதை விட, இப்படி மாற்றி யோசித்தால் அது பலன் தருகிறது.
  4. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு வேகம் இருக்கிறது. ஆற்றொழுக்காகச் சொல்லப்படும்போது வேகமோ, மொழியோ மாறினால் சட்டென வாசிப்புத்தடை ஏற்படும். இவை இரண்டும் உங்கள் கதையில் சரியாக இருக்கிறதா என்பதை ஒவ்வொரு முறையும் சரிபார்த்தபின்னரே அனுப்பவேண்டும்.
  5. ஒரு கதை என்பது அதன் முடிவை நோக்கி எழுதிச் செல்லப்படக்கூடாது. டிவிஸ்ட்தான் ஒரு நல்ல கதையை உருவாக்குகிறது என்ற கற்பிதம் உடைபடவேண்டும். முடிவே எட்டப்படாவிட்டாலும், எந்தத்தீர்வும் சொல்லப்படாவிட்டாலும் நல்ல கதை என்றும் நிலைத்து நிற்கும்.

Leave a comment