கடந்த வாரயிறுதியில் Vasteras தமிழ்ச் சங்கத்திற்காகப் புனைவெழுத்து பற்றிய சிறிய உரையாற்றியிருந்தேன். அதில் மொழி, கட்டமைப்பு, கற்பனை என்னும் மூன்று முக்கியக்கூறுகளைப் பற்றி விளக்கினேன்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு சாதாரணன் செல்வது வேறு. அதன் வரலாறு, தொன்மம், சிற்பம், தத்துவம், கட்டடக்கலை ஆகியவற்றை அறிந்து செல்பவன் வேறு. இவை யாவையும் அறிந்த பின்னர் அதன் மீது தன் கற்பனையை ஏற்றி அனுபவிப்பவன் வேறு என்று ஓர் உதாரணம் கொண்டு கற்பனையைப் பற்றி விளக்கினேன்.
இந்த உரையைக் கேட்ட நண்பர் ஒருவர் அதீதக் கற்பனை என்பது அன்றாட வாழ்விற்கு எதிரான ஒரு மனநிலைதானே. கற்பனையைத் தொழும்போது நம் லௌகீக வாழ்வுக்கு எதிரான ஓர் அடியை எடுத்துவைக்கிறோம் தானே. இதனால் நிகழும் விளைவுகளை/ சோகங்களை எப்படி எடுத்துக்கொள்வது என்று கேட்டிருந்தார்.
அவருக்குப் பதில் சொல்லும் விதமாகவே ஜெயமோகனின் மேற்கண்ட யட்சிகளை எழுப்புதல் என்ற பிரபல பத்தியை அனுப்பி வைத்தேன். இலக்கியமும், எழுத்தும் நம் ஆழத்து வாசல்களைத் திறந்து வைப்பன. அந்த அக விழிப்பு ஏற்படும்போது கணிசமாக யதார்த்தத்தை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்படுகிறதுதான். ஆனால் ஆழம் என்ற ஒன்றே இல்லை என்று நம்புவது பேதைமை. அந்த ஆழம் நம்மை மூழ்கடிக்கும் என்று நம்புவது தவறு. அந்த ஆழத்தில் நீச்சல் பழகும்போது, அது நம்மை வாழ்வு இதுவரை அணுகாத எல்லைகளுக்கு அழைத்துச்செல்கிறது என்பதே நிதர்சனம்.
போலவே எந்த பெருஞ்செயலின் முதல் அடியையும் அச்சத்தோடு எடுத்து வைத்தல் அபத்தமானது. கற்பனையின் உச்சத்திற்குச் செல்லும் எத்தனையோ பேர் லெளகீக மகிழ்வை அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் அனுபவித்தபடியேதான் இருக்கிறார்கள். அவர்களை உதாரணமாகக் கொள்ளலாம் என்றும் சொன்னேன்.
என் தனிப்பட்ட அனுபவத்தின்படி, இப்படிக் கற்பனையில் உழலும் காலம் லௌகீகத்தின் நரகம் என்றெல்லாம் சொல்லிச் சிறுமைப்படுத்தவே மாட்டேன். இந்த வருடம், நாற்பத்தைந்து நாள்கள் மயல் நாவலை எழுதிய காலத்தை நினைத்துக்கொள்கிறேன், அது தினசரிக் கற்பனைகளால் எழுந்து வந்ததுதான். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் ஆனந்தப்பெருங்கடலில் தீர்த்தவாரி செய்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு தருணமும், விழிப்போடும், மகிழ்வோடும் உளமெங்கும் உற்சாகம் பொங்க, அனுதினமும் என்னுடைய நாள்கள் பொலிந்து பூத்துக்கொண்டே இருந்தன.
ஆகவே யட்சிகளின் உறக்கம் கலைவதுதான் நல்லது.


Leave a comment