புனைவு: வாசிப்பும் எழுத்தும் – ஓர் உரை

ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் (Västerås) நகர தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக நேற்று மாலை ‘புனைவு: வாசிப்பும், எழுத்தும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினேன்.

புனைந்து சொல்லப்படும் கதைகளின் மீது நம் ஆர்வம் எங்கிருந்து உருவாகி வளர்கிறது? வாசிப்பின் மீதான நம் ஆளுமையை விரிவாக்கிக் கொள்வது எப்படி? காட்சி ஊடகங்களின் பாதிப்பிலிருந்து மீண்டு, சொற்களின் உலகில் புகுந்து மகிழ்வது எப்படி? இதுவரை வாசிப்புப் பக்கமே ஒதுங்காதவர்கள் எங்கிருந்து தொடங்கலாம்? எழுதுவதற்கான அடிப்படைகள் என்ன? எப்படி ஒரு கதையை வாசகன் ரசிக்கும் வண்ணம் சொல்வது? நல்ல எழுத்தின் அடிப்படைகள் என்னென்ன? போன்றவற்றை கருப்பொருள்களாகக் கொண்டு ஒர் உரையை நிகழ்த்தினேன். சக மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் கோகிலா, அல்புனைவு வாசிப்பும் எழுத்தும் பற்றிப் பேசினார். அதைத் தொடர்ந்து உறுப்பினர்களுடன் வாசிப்பு, எழுத்து பற்றிய வெகு உற்சாகமான உரையாடலும் தொடர்ந்து நடந்தது. 90 நிமிடங்கள் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு இரண்டே கால் மணி நேரங்களைத் தாண்டியும் நீண்டது.

மிக நிறைவான மாலை.

Leave a comment