சிம்மாசனமற்ற மன்னர் குலம்

காலையிலேயே அனல்மழையென இறங்கும் வெயில், பத்தரை பன்னிரண்டு ராகுகாலம், வரப்போகிற சந்திராஷ்டமம் எல்லாவற்றையும் முன்னிட்டு, ஏழு மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஏட்டோடு போய்விடாமல் அர்த்தம் கொடுக்கிற நாள் என்பதால் வரிசை முழுக்க மகிழ்ச்சி.

செல்ஃபோன் கொண்டு போகலாமா, ஆதார் செல்லுமா – சிறப்புக் கேள்விகள். வெகேஷன் வெளிநாடா, மாவடு கிடைத்ததா, வத்தல் போட்டாச்சா – சீசன் கேள்விகள். பொண்ணுக்கு விசேஷம் உண்டா, லிவின் கப்பிளையெல்லாம் கம்யூனிடில சேக்கலாமோ – நிரந்தரக்கேள்விகள். உரையாடலில் திளைத்துக்கொண்டிருந்தது திரள்.

பெயர் சரிபார்த்து, இடதுகையில் மைவைத்து, பொத்தான் அழுத்தி, சீட்டைச்சரிபார்த்து, விரலுக்கு ஒன்று, முகத்துக்கு ஒன்று என ஃபோட்டோ எடுத்து வெளியில் வந்தது. ரோடா சார் இது, எத்தனை குழி? , மெட்ரோ வேலை பாக்குறேன்னு வீடு முழுக்க தூசி. சுத்தமா தண்ணி இல்ல, இந்த சம்மருக்கும் லாரித்தண்ணிதான். எவன் வந்துதான் இன்னா, நமக்கு பொழப்பு முக்கியம்.

இருக்கையிலிருந்து இறங்கி இயல்புக்கு வந்திருந்தது மன்னர் குழாம். ராகுகாலம் தொடங்கியிருந்தது.

Leave a comment