ஒரு இல்லமும் சில இன்னல்களும்

எப்போதும் மிதந்து சென்று கொண்டே இருக்கின்றன
எனக்காக நகரின் ஏதோ ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டிருக்கின்ற அறையின் சுவடுகள் யாவும் ஒவ்வொரு தேடலும், தோல்வியும்

உரைத்துக்கொண்டே இருக்கின்றன
புதிய மனிதர்களையும் தோற்றங்களையும்

 

ஒரு போதும் வாய்ப்பதேயில்லை
மனதிற்க்கியந்த வாடகை இல்லம்

 

ஒரு நோய்கொண்ட நாளின் படுக்கைஅறை போல
பெரும் சலிப்பை அளிக்கின்றன
தேடுதல்களின் நீட்சி.

 

தேடலின் வலிமைகள் குறைந்து போன
ஒரு தேய்பிறை நாளில்
வருகின்றன அகன்ற அறைகளும்
மரங்களடர்ந்த சூழலும்
நீரலைகளை காற்றில் தடவித் தரும்
கிணற்றடியும் கொண்ட
சொந்த வீட்டின் நினைவுகள்
கரைந்து போன மழை நாளின்
சுவடுகள் போல
வீடு குறித்த பழைய
நினைவுகள் கடந்து போக
மீண்டும் தொடர்கின்றன
புதிய வீடு பற்றிய கவலைகள்.

 

(ஒரு புதிய வீட்டின் தேடல் குறித்த பழைய வீட்டின் கவிதை)

Leave a comment