
நான் சிவராமன் கணேசன். தஞ்சாவூரில் பிறந்தேன். அப்பா பெயர் சிவ.கணேசன், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா பெயர் பாலாம்பாள் (2007ல் மறைந்தார்).
என் ஒன்பதாவது வயதில் அப்பாவின் பணிமாற்றல் காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில் குடியேறினோம். பள்ளி இறுதியாண்டு வரை அங்கேயே வளர்ந்தேன். வளரிளம் பருவத்தை நீலகிரி நினைவுகளே ஆட்கொண்டதால், சொந்த ஊர் தஞ்சை என்று சொல்வதை விட நீலகிரி என்று சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதியாண்டு வரை படித்தேன். பின்பு தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைக் கல்வியும் கற்றேன். கணினி அறிவியல் கற்றிருந்தாலும் , வரைகலையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக டிசைனிங்கை என் பிரதானத் தொழில் தேர்வாக எடுத்துக்கொண்டேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் சென்னையில் சினிமாவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 2004 முதல் 2018 வரை பதினான்கு வருடங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்முறை டிசைனராகப் பணியாற்றினேன். 2018ல் சென்னை வந்த பிறகு, தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் இணைந்து இப்போது திட்ட மேலாளராகப் பதவி வகித்து வருகிறேன்.
2014 இறுதியில், என் வளரிளம்பருவ நினைவுகளை #kundahMusicSeries என்ற தலைப்பில் எழுதினேன். அதுவே என் முதல் எழுத்து முயற்சி. மலை, மக்கள், இசை மூன்றையும் இணைக்கும் ரசனைக்கட்டுரைகளாக அவை வெளிவந்தன. 2015ல் இக்கட்டுரைகள் தொகுப்பாக்கப்பட்டு செந்தாழம்பூவில் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது.
2017ல் முதல் சிறுகதை நிகழ்தகவு ஜன்னல் இதழில் வெளிவந்தது. 2019ல் ஆனந்தவிகடனில் வெளிவந்த நிஷாகந்தி சிறுகதை என் பெயரைப் பரவலாக்கியது.
2023ல் ஆசிரியர் பா.ராகவன் அவர்களுடனான சந்திப்பும், அவர் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகளும் என் எழுத்துப்பயணத்தில் மைல் கற்களாக அமைந்தன. தொடர்ந்து மெட்ராஸ் பேப்பரில் நுட்பம், ரசனைக்கட்டுரைகள், வரலாறு, பாரம்பரியம், அரசியல் என்று வெவ்வேறு தலைப்புகளில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன்.
அதே வருடமே என் முதல் சிறுகதைத் தொகுப்பு நிஷாகந்தி என்ற தலைப்பிலேயே வெளியானது. அமானுஷ்ய, மர்மக்கதைகளின் தொகுப்பான அது, விற்பனையாலும், விமர்சனங்களாலும் பரவலாகப் புகழ்பெற்றது.
2024ல் கூகுள் உருவாகி வளர்ந்த வரலாற்றை மையமாக வைத்து ‘G இன்றி அமையாது உலகு’ என்ற தொடரை மெட்ராஸ் பேப்பரில் எழுதினேன். அந்த வருட இறுதியில் அது ஸீரோ டிகிரி பப்ளிகேஷனாக வெளிவந்தது. சென்னைப்புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் சாதனையும் படைத்தது.
2025ல் மயல் என்னும் தலைப்பில் என் முதல் நாவல் வெளியாகியிருக்கிறது. நீலகிரியில் வரலாற்றை நீலமலை ரகசியம் என்ற தலைப்பில் மெட்ராஸ் பேப்பரில் எழுதி வருகிறேன்.
எனக்கு இசை, பயணம், மலையேற்றம், சிற்பவியல், வரலாறு, பாரம்பரியம் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு. எழுத்தை ஆர்வம் என்று சொல்வதை விட மூச்சு என்றே வைத்திருப்பதால் இந்த வரிசையில் அதை இணைக்கவில்லை.
