தேவதைகள் தரும் ரோஜாக்கொத்து

நேற்று வாசக நண்பர் சுரேஷ் அமாசி மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதன் கடைசி வரியைப் படித்து நெடு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். (உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தினம் தினம் ஏதாச்சும் தேவதை வந்து ரோசாப்பூ கொடுத்து எழுப்புதா).

நிதர்சனம் என்னவென்றால், இன்றைய தேதியில் பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லோரையும் ,காலைப்பொழுதை வெறுப்பவர்களாகத்தான் மாற்றி வைத்திருக்கிறது காலம். என் வேலை நேரம் அமெரிக்க நேரம் சார்ந்தது (EST). பெரும்பாலும் என் நாள் நள்ளிரவில் / அதிகாலையில்தான் நிறைவுறும். பணி நேரம் மாறிய ஆரம்பக் காலங்களில், இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் என்று எந்த முறைமையும் இன்றிதான் ஆடிக்கொண்டிருந்தேன்.

பிறகுதான் எனக்குக் கிடைத்திருப்பது சாபமல்ல, வரம் என்று ஆசிரியரின் வழி எனக்கு ஒரு திறப்பு கிடைத்தது. பிறகு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலை 5:30 – 6 மணிக்குள் எழுந்து விடுவது என்ற முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதும்போது காலை 6-11 மணிக்கு ஒரு செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு அதனைப் பின்பற்றத் தொடங்கினேன். அது முடிந்த பின்னரும் சாதாரண நாள்களில் 6-10 வரை காலையில் செய்ய வேண்டிய பணிகளை வரிசைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நடை, மூச்சுப்பயிற்சி, ஜர்னல் எழுத்து, சிறிய வீட்டுப்பணிகள், அன்றாட எழுத்து, வாசிப்பு என்ற இந்த வரிசை அனுதினமும் எழுந்தவுடனேயே மனத்தில் வரிசையாக நிற்கும்.இப்படித் தொடங்கும் நாள் மீதமுள்ள நீண்ட நாளை மிகுந்த உற்சாகமும், கனிவும் கொண்டதாக மாற்றிவிடும். மனத்தைப் பக்குவப்படுத்தி வைக்கும். நீ செயல்வீரன் என்று சொல்லிக்கொள்ளச்சொல்லும். ஒரே நாளை இரண்டு வேலை நாள்களாக மாற்றிக்கொள்ளக்கூடிய சாமர்த்தியத்தை கற்றுக்கொள்வோம். இது ஒவ்வொருவருக்கும் அவர்களது அன்றாடங்கள் சார்ந்து மாறும்தான். ஆனால் காலையை நமக்கு ஏற்றபடி வளைக்கும்போது நாள் நம் வசமாகிறது என்பதே என் செய்தி.

மிக முக்கியமாக

  1. காலையில் அலுவலகம் பற்றி நினைப்பதில்லை – மின்னஞ்சல்களை எழுந்தவுடனேயே திறப்பதில்லை..
  2. பணம் / வருமானம் சம்பந்தப்பட்ட எதையும் யோசிப்பதில்லை.
  3. வருங்காலக் கவலைகள் எதனையும் இழுத்து வைத்துக்கொண்டு அதன்மீது சோக வீணை வாசிப்பதில்லை.

இந்த மூன்று பொன்விதிகளோடு, காலை வழக்கங்களை மேற்கொள்ளும்போது தேவதைகள் ரோஜாப்பூவோடு தயாராகக் காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காலையையும் கொடையாக மாற்றிக்கொள்வதைப்பற்றி, என் ஆசிரியர் பா.ராகவனிடமிருந்தும், எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்தும்தான் நான் கற்றுக்கொண்டேன். அவர்களை விட அதிகப் பணி செய்பவர்கள் யாருமில்லை. ஆனால் ஒருநாளும் அவர்கள் காலை சோர்வோடு விடியாது. அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்துக்கொண்டிருந்த தேவதைகளைத்தான் நானும் இப்போது கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இதோ என்னருகே நறுமணத்தை உணர்கிறேன்.

Leave a comment