விழி, எழு, ஓடு என்பதுதான் மானுடம் கண்ட மூன்று மகத்தான வார்த்தைகள் என நம்புகிறேன். நம் அன்றாடங்களில் குழப்பங்களுக்கும், வினாக்களுக்கும், தோற்ற மயக்கங்களுக்கும், துன்பங்களுக்கும் குறைவேதுமில்லாத இடமுண்டு. இவை அனைத்துமே நம்மை வீழ்த்தக் காத்திருக்கும் சிற்றரக்கர்கள். உட்கார், உறங்கு, போதும், இன்னும் சிறிது நேரம் அலைப்பேசி பார் என்று சிற்றின்பங்களில் தள்ளிவிடும் இனிப்புக்கரங்கள் கொண்ட அவுணன். இப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம், விழு, எழு, ஓடு என்ற மூன்றோடு அலைந்து திரி என்ற நான்காவதாக ஒன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். இது தீர்வுக்கான உத்வேகத்தைப் பலமடங்கு உயர்த்தும். தரிசனத்தைக் கண்முன் கொண்டு வந்து இறக்கும்.
வான்கா தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைத்தான் இன்றைய ஜர்னலாக எழுதியிருக்கிறேன். நேற்றுதான் இதைப் படித்தேன். இது என்னை வந்து சேர்ந்தபோது, சட்டென விழித்து, எழுந்து, ஓடி, அலைந்து என் சிற்றழுத்தத்திலிருந்து மீண்டு வந்தேன். yes, wandering we find our way.


Leave a comment