மயல் மலர்ந்த காதை – 2

நாவலின் கருவும், களமும் உருவான பிறகு, ஆசிரியருக்கு அனுப்பிய ஒலிக்குறிப்பை என் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். வாசிப்பிலும், எழுத்திலும் சிறந்த என் நெருங்கிய வட்டம் அது. இதைக்கேட்டதும் பதறினார்கள். இந்த நாவலில் காமம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது. அது சரியாக வருமா என்று அஞ்சினார்கள். அதற்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய கிளாசிக் நாவல் எனக்கு எழுத்துவட்டத்தில் மிகச்சிறந்த அறிமுகத்தை எனக்கு வழங்கும் என்று நம்பியிருந்தார்கள். முதலில் வரும் நாவலாக இதுவா அமைய வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

என் எழுத்து மேல் கொண்ட சந்தேகம் அல்ல. என் மேல் கொண்ட அன்பு. வேறு மாதிரியான அவப்பெயர் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். எனக்குப் புரிந்தது. அவர்களிடம், நிச்சயம் இந்தக்கதைக்கு அதை மீறிய வலுவொன்று இருக்கிறது. அது நாவலையும் என்னையும் காக்கும் என்று சொன்னேன்.

கதைக்கு மீறிய வலுவொன்று இருப்பது போல நம்மை மீறிய மனமொன்றும் இருக்கிறதுதானே. இந்தக்கதையின் பாத்திரங்களை அவர்களின் குணாசிதிசயங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படை வண்ணத்தை வகுத்திருக்கிறேன். அதில் கறுப்பின் அம்சமாக வந்தவள் ஷ்யாமா.

இவளிலிருந்துதான் கதை தொடங்கவேண்டும். கறுப்பிலிருந்து தொடங்கி வெண்மையில் முடித்தல் என்பதே நாவல் கட்டமைப்பு. ஷ்யாமா வந்தால் என்றால் காமம் பேசப்படாமல் கடக்க முடியாது. ஆகவே அவளை வைத்தே முதல் அத்தியாயம் அமையவேண்டும். ஆகவே எழுதினேன்.

அவளை வைத்து எழுதியிருந்த ‘ஷ்யாமாவின் இரவுகள்’ என்ற அந்த அத்தியாயம், அதீத காமம் கொண்டிருந்தது. ஒரு பெளர்ணமி முன்னிரவில், நிலவு பாயும் முற்றத்தில், ஜெயதேவர் அஷ்டபதி பாடிக்கொண்டு க்ருஷ்ணாவின் நினைவில் விரகதாபத்தில் ஷ்யாமா தவிப்பது போல எழுதப்பட்ட அத்தியாயம் அது.

நாவல் வெளிவரும் என்று அறிவித்துவிட்ட முதல் நாள் அதிகாலை அது. ஒன்பது மணிக்கு அத்தியாயம் பதிப்பிக்க வேண்டும். ஐந்து மணிக்கு இது தயாராக இருந்தது. ஆனால் படித்து முடித்த எனக்கே பதறியது. நண்பர்கள் என்ன சொன்னார்களோ அது நடந்திருந்தது, என்னையும் மீறி. இந்த நாவலை இப்படிப்பட்ட அத்தியாயத்துடன் தொடங்கினால், கலையில் அது நிற்கும்தான். ஆனால் முதல் நாவலின் முதல் அத்தியாயமாய் இப்படி அமைந்தால் வேறு பெயர் வந்துவிடுமே என்று அவர்கள் சொன்னது காதில் ஒலித்தது.

காமம் வேண்டும். ஆனால் அதீதம் வேண்டாம். பூடகம் வேண்டும். கதை சொல்லவேண்டும். அடுத்த அத்தியாயத்திற்கான கொக்கி வேண்டும். களத்தை விரிவாகப்பேசவேண்டும். ஆகவே ஷ்யாமாவை மரகத ஷ்யாமாவாக மாற்றினேன். கறுப்பிற்கு முன்பு சற்று பச்சையைச் சேர்த்தேன். பச்சைக்கடலை உருவகமாக்கி அந்த அத்தியாயத்தை எழுதி நிறைவு செய்தேன். மணி 8:55.

யாருக்கும் அனுப்ப நேரமில்லை. நேரடியாகப் பதிப்பித்தேன். குளித்துச் சாப்பிட்டு வந்து பார்த்தபோது நிறைய செய்திகள். நிறைய பாராட்டுகள். நண்பர்களின் வாழ்த்து எல்லாம் இருந்தன. ஆசிரியர் செய்தி மட்டும் வரவில்லை. படித்தாரா தெரியவில்லை. ஒருவேளை பிடிக்கவில்லையோ என்ற பதற்றமும் இருந்தது. அவருக்கும் நாவல் அத்தியாயம் எழுதும் பொறுப்பு அன்றிலிருந்துதான் தொடங்குகிறது என்று மனம் சமாதானம் சொன்னது. ஆகவே காத்திருந்தேன்.

10 மணிக்குச் செய்தி வந்தது.

’அவ்ளதான். முதல் சேப்டர் நல்லா வந்திருக்கு. இது ஜெயிச்சுடும்’

ஷ்யாமாவின் இரவுகள் தன்னளவில் சிறந்த அத்தியாயமே. ஆகவே என்றேனும் ஒருநாள் ஒரு தனித்த சிறுகதையாக வெளிவரும்.

(தொடரும்)

Leave a comment