மயல் மலர்ந்த காதை – 1

இந்த வருடம் வேறு ஒரு பெரிய நாவலைத் திட்டமிட்டருந்தேன். பெரிய கேன்வாஸில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஃபேண்டஸி ஃபிக்‌ஷன் கதையாக அது இருந்தது. அதைப் பற்றி ஆசிரியரிடம் பேசி, விவாதித்து, எழுதவும் தொடங்கினேன். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றை எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் நேரில் அழைத்தார். ‘இதை தமிழகத்தில் வேறு எந்த பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தாலும் உடனே பிரசுரம் செய்வார். சம்பவங்கள், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் நன்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த நாவலை மொழியால் இன்னும் கூர்தீட்ட வேண்டும். அதனால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்’என்றார். அவர் சொன்னதன் மறைபொருள், மொழி நன்றாகத்தான் இருக்கிறது உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன் என்பதைத்தான். ஆனால் அப்போது நான் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

எனக்குக் கோபம் வந்தது. அதற்காக நிறைய மெனக்கெட்டிருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் கடும் பணிப்பளுக்களுக்கிடையே அதிகாலையில் பல மணி நேரங்கள் செலவழித்து ஆய்வு செய்திருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை திருத்தி எழுதியிருந்தேன். ஆகவே உடனே ஏற்றுக்கொள்ளாமல், சண்டை போட்டேன். விவாதித்தேன். அவர் சொன்னதன் நியாயம் புரிந்தபோது, ஒரு முடிவுக்கு வந்தோம். அந்த நாவலை ஒத்திவைத்துவிட்டு மொழிப்பயிற்சியாக இன்னொரு நாவலை ஒரு மாதத்திற்குள் வேறு களத்தில், வேறு மொழிநடையில், ஒரு மாதத்திற்குள் தினம் ஒரு அத்தியாயமாக எழுத வேண்டும் என்பதே அது.

அடுத்த நான்கு நாள்களுக்குள் ஒரு கதைக்கருவை விவாதித்துச் சொல்வது ஏப்ரல் மாதம் முழுவதும் எழுதுவது என்று முடிவு செய்தோம். என்னிடத்தில் ரத்தம் சொட்டச்சொட்ட ஒரு க்ரைம் நாவல் எழுதும் திட்டம் இருந்தது. குற்றம் , தொடர்கொலை, கண்டுபிடிப்பு என க்ளாசிகலாக ஒரு துப்பறியும் கதையை எழுதுவது என்பது என் திட்டங்களில் ஒன்று. அதை நிராகரித்தார்.

என்னிடமிருந்த இன்னொரு ஒன்லைனர், உலகின் அதிமதுரமான இனிப்பைத் தேடி பயணம் செய்யும் ஒரு இளைஞனின் கதை. அதனை கும்பகோணம் பின்னணியில் விவரித்து, உணவு மற்றும் காமம் துரத்தும் க்ருஷ்ணாவின் பாத்திரத்தை உருவாக்கி ஒரு பதினைந்து நிமிட வாய்ஸ் நோட்டில் மயல் நாவலில் களத்தை, பாத்திரங்களை, நடையை உருவாக்கி அனுப்பியிருந்தேன்.

பொதுவாகவே பெரிய முடிவுகள் எதுவும் அமைவதற்கு முன்ப ஆசிரியரிடம் ஒரு சிறிய நிதானம் அமையும். மேல்நோக்கிப்பார்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பார். தொலைபேசி என்றால் ஒரு 15 முதல் 25 நொடிகள் ஒரு pause கொடுத்து யோசிப்பார். அதற்குப் பிறகு வருவது அனேகமாக வாழ்வின் மிக முக்கிய ஆசிச் சொல்லாக இருக்கும், எங்களுக்கு. எனக்கு அன்று அந்த இடைவெளி இல்லாமலேயே அந்த ஆசி அமைந்தது. ‘இதுதான். எழுதுங்க’என்றார்.

மயல் நாவல் தொடங்கியது.

(தொடரும்)

Leave a comment