முதற்சொல்

ஜேம்ஸ் பேட்டர்சன் தன்னுடைய எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் ‘முதல் வரிகள்’ என்று ஒரு தனி அத்தியாயமே வைத்திருப்பார். எப்படி முதல் வரியிலிருந்தே கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்ல வேண்டும் என்று விரிவாக அதில் விளக்குவார். (அபிநயங்களோடு அவர் வகுப்பெடுப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்)

வாசகனுக்கு மட்டுமல்ல இந்த முதல் வரியும் முதற்சொல்லும் வந்து சேருவது ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே மிக முக்கியமான தருணம். அது வந்துவிட்டபிறகு மனிதனாக இருக்கும் அவன் கலைஞன் என்ற சிறகுகள் அணிவிக்கப்படுகிறான். பின்பு அவன் செல்லும் எல்லைகள் அவனே அதுவரை எண்ணியிராத ஒன்றாக இருக்கும். பறந்தும், மிதந்தும் சொல்வெளியின் அந்தரங்கங்களில் நுழைந்து செல்லும் பயணம் அது. தனக்குச் சிறகைத் தந்த அந்த முதல் வாக்கியத்தையும் அவன் அப்போது மறந்திருப்பான். அங்கிருந்து அது வாசகர்களின் சொத்தாக மாறிப்போகும். வாழ்நாளுக்கும் அதை அவர்கள் போற்றிப் பாதுகாத்துச் சொல்லி மகிழ்வர்.

*

அணைக்கரை பஸ் ஆனையடியைக் கடந்து வந்து டவுன்ஹைஸ்கூல் வாசலையும், கடந்து, நாற்சந்தியையும் கடந்து போயிற்று

விரிந்து விடைத்த செவிகளை ஆவேசமாக அசைத்துக்கொண்டு ஓடிவரும் மதம் கொண்ட யானையின் பிளிறலைப் போலிருந்தது இந்திராவதியின் பேரிரைச்சல்

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை.

*

மேற்கண்ட மூன்றும் என் நினைவின் தாழ்வாரங்களில் நிலைபெற்றுவிட்ட என் விருப்பத்திற்குரிய நாவல்களின் முதல் வரிகள். என்றும் மறக்கமுடியாத ஆழ் பதிவுகள். இன்றும் மனப்பாடமாக இதை என்னால் எழுதிவிட முடிகிற வலுக்கொண்டன. இவை முதன்முதலில் அந்த எழுத்தாளர்களின் சிந்தையில் தோன்றிய தருணங்கள் அவர்களுக்கு எவ்வளவு சிறப்பானதோ, அதே அளவு சிறப்பை எனக்கும் அளிப்பன.

*

இது விரைவில் வெளிவரவிருக்கும் என் மயல் நாவலின் முதல் பத்தி. இவை எனக்குள் வந்தமர்ந்த முதற்கணம் இப்போது எனக்கு நினைவில்லை. ஆனால் அது நிகழ்ந்தபோது நான் சொல்வெளியில் மிதந்து கொண்டிருந்தேன் என்பது மட்டும் திண்ணம்.

பச்சை நதி அது. பரந்து விரிந்திருந்தது. கடலளவு விரிக்கப்பட்ட ஒரு பெரிய இளவாழை இலை என்றுதான் முதல் எண்ணம் சொன்னது. உயரம் குறைந்து அணுக, கரும்பச்சை, இளம்பச்சையாகி அதனூடே சிறிய நீல வட்டம் தென்பட்டது. பச்சைக் கடலில் நீந்தும் சிறு நீலத்தோணி. இந்தக் கடல் வாழை இலையில் பரிமாறப்பட்ட நீல விருந்து

Leave a comment