ஓடிவரும் மான்குட்டிகள் மூன்று, எந்தக் காரணமும் இன்றி திடீரென்று தண்ணீரில் குதிக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார் பரத்வாஜ் ரங்கன், அதிலேயே ‘இப்படித்தான் introverts சூப்பர் மார்க்கெட்டில் எதிரில் யாரேனும் வந்தால் சட்டெனப் பாதை மாறி ஒளிந்துகொள்வார்கள்’ என்ற குறிப்பையும் சேர்த்திருந்தார். சக இண்ட்ரோவெர்ட் நட்பு ஒருவர் அதனைப் பகிர்ந்திருந்தார். இருவரும் கண்களில் நீர் வரும் ஸ்மைலியைப் பகிர்ந்து சிரித்துக் கொண்டோம்.
உண்மையிலேயே இந்த அகக்கூட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் இச்சையைத் தவிர்க்க முடியாதவர்களின் இண்ட்ரோவெர்ட் உலகம் பிரத்தியேகமானது. நான் அந்தக் குழுவின் பிரதிநிதி. உலகம் மிகச்சாதாரணமாகச் செய்யும் பல விஷயங்கள் எனக்கு மிக மிகக் கடினமானது.
வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போதே எண்ணற்ற வழித்துணைச் சிறுதெய்வங்களை வேண்டி விரும்பிக் கூட்டிச் செல்வது வாடிக்கை. லிஃப்ட்டில் யாரும் வந்துவிடக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறும் வரைக்கும் அக்கம் பக்கத்தினர் யாரும் பார்த்துவிடக்கூடாது. காலை நடை போகும்போது எதிரில் யாரேனும் வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் ஏதேனும் பேசிவிடக்கூடாது. சட்டென குறுக்கே புகுந்து போகும் பாதை இருக்கவேண்டும். காய்கறி வாங்கப்போகும்போது கூட்டமாக இருக்கக்கூடாது. உணவகங்களில் ஓர இருக்கையில் அமர்ந்து கொள்ளும் இடம் இருக்கவேண்டும். வெளிச்சம் குறைந்த இடமாயிருந்தால் இன்னும் வசதி. இப்படி கூடாதுகளின் வரிசை மிகப்பெரிது. தீய எண்ணங்கள் ஏதுமில்லை. எதிர்கொள்ள முடியாத அகத்தடையும் கூச்சமும் மட்டுமே காரணங்கள்.
அமீரகத்தில் இருந்தபோது துபாய், ஷார்ஜாவிலும், இப்போது சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகும், நகர நெரிசலைக் கடந்து மனித நடமாட்டமே இல்லாமல் அமைதியாகப் போய் அமர்ந்து கொள்ளும் இடங்கள் குறைந்தது இருபதாவது எனக்குத் தெரியும். அங்கே பெரும்பாலும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அங்கே நிச்சயம் ஒரு மூலை எனக்காகக் காத்திருக்கும். இது போன்ற இடங்கள் எனக்களிக்கும் ஆசுவாசங்களைச் சொல்லி மாளாது. கடவுள் பார்த்த பக்தன் போன்ற பிறந்த பலனை அடையும் தருணங்கள் அவை.
சினிமாவைக்கூட ஊருக்கு ஒதுக்குப்புறமான அரங்கில், அதிலும் நள்ளிரவுக்காட்சிகளைத்தான் விரும்புவேன். நிச்சயம் என்னையறிந்த யாரும் அங்கே இருக்கமாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதுபோன்ற சாகசங்களுக்குத் தயாராக இருந்தேன்.
வீடு என்பது எனக்கு மட்டுமே உரித்தான தனிக்கூடு. அதில் புதியவர்களும், அந்நியர்களும் வரும்போது என் மனம் உச்சக் கொந்தளிப்பை அடையும். எலக்ட்ரீஷியனோ, ப்ளம்பரோ ஏதேனும் பழுதுபார்ப்பிற்கு வரும்போது இதையெல்லாம் இருந்த இடத்திலிருந்தே ரிமோட்டில் செய்துகொள்ளமுடியாதா என்று யோசித்துக்கொள்வேன். அழைப்புமணி என்ற ஒன்றைக் கண்டுபிடிக்காமல் விட்டால்தான் என்ன என்று தோன்றும். எதற்கேனும் யாரேயேனும் கதவுக்கு அந்தப்பக்கம் சந்திப்பதையே மிக நடுக்கத்தோடுதான் மனம் எதிர்கொள்ளும். இவர்கள் போனபிறகு கதவைச்சார்த்திக்கொண்டு, குறைந்த ஒளியில், இளையராஜாவை ஒலிக்கவிட்டு கண்ணை மூடிக்கொள்ளும் வரையிலும் அந்த நடுக்கம் குறையாது.
நல்லவேளையாகச் சிறு வயதிலிருந்தே என்னையும், எனதிந்தக் கூட்டுக்குள் ஒடுங்கும் தன்மையும் நன்கு அறிந்த மனைவியால் பிழைக்கிறேன். அவள் என் குணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வருபவர்களை எதிர்கொண்டும், என் கிறுக்குத் தனங்களைப் பொறுத்துக்கொண்டும் இயங்குகிறாள். காலமும் ஒத்துழைக்க ஒருவாறாக ஓடிக்கொண்டிருந்தேன்.
எல்லாவற்றிற்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கிறது என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார் இல்லையா? எனக்கும் அந்தக்காலம் வந்தது.
அடிப்படையில் நான் ஒரு டிசைனர். ஐடி கம்பெனியில் டிசைனர் வேலைதான் என் போன்ற இண்ட்ரோவெர்டுகளுக்கு மிகச்சாதகமான வேலை. அங்கேயும் பேசவேண்டும்தான். மனிதர்களுடன் புழங்கவேண்டும்தான். ஆனால் அதற்கு மின்னஞ்சல், முகம் பார்க்காத டீம்ஸ் மீட்டிங், மைண்ட் மேப் என்று வேறு குறுக்கு வழிகளும் உண்டு. ஓரமாக அமர்ந்து நாமுண்டு, நம் அகம் உண்டு என்று மனத்தோடு விளையாடி கதைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு அதுவரை நான் கொண்டிருந்த அலுவலகம் சார்ந்த டிசைனிங் ஸ்கில்செட் போதுமான வருமானத்திற்கு வழிவகுக்கவில்லை. வேறு வழியே இல்லாமல் அலுவலில் சில படிகளை ஏற வேண்டியிருந்தது. அது எளிதுதான். சில தேர்வுகள், சில சான்றிதழ்கள். சில புதிய திறன்கள். அதெல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் மேலே ஏற ஏற அனுதினம் மனிதர்களைச் சந்திக்கவும், அவர்களை அனுசரிக்கவும், நெறிப்படுத்தவும், சண்டைபோடவும், சமாதானமாகப்போகவும் வேண்டியிருந்தது. என் குணம் இதில் எதிலுமே ஒட்டாமல் முட்டி மோதிக் காயங்கள் உண்டாகிக் கொண்டே இருந்தன. அப்படியே விட்டுவிட்டு ஓடமுடியாது. இந்த சில்லறைக் காரணங்களை வாழ்க்கை மீது செலுத்த முடியாது. அதை வாழ்ந்துதான் தீரவேண்டும்.
அன்றிலிருந்து இந்த அகக்கூட்டை முற்றிலும் உடைத்து விடாமல் எப்படி இதற்குத் தீர்வு காணலாம் என்று யோசித்து சில விஷயங்களைச் செய்தேன்.
- சிறிய படிகள்:
எதுவும் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை அறிந்திருந்தேன். இரவில் பிரார்த்தனை செய்து காலையிலேயே தெய்வம் என்னை எக்ஸ்ட்ரோவெர்ட்டாக மாற்றி உலகம் பிறந்தது எனக்காக என்று பாட வைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இது என் குணம். மாற்றவேண்டுமென்றால் படிப்படியாகத்தான் போகவேண்டும். நான்தான் முன்னெடுக்க வேண்டும். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முயற்சி செய்து பார்த்தேன். பல தோல்விகள். ஆனால் கிடைத்த சில கனிகள் என்னை உற்சாகம் கொள்ளச்செய்தன.
- புன்னகை
எதுவும் உடனே பேச அகம் எழுந்துவராவிட்டாலும், எதிரில் வருபவரைப்பார்த்துப் புன்னகைக்கலாமா வேண்டாமா எனத் தாயமாடும் என் மனப் பகடையாட்டத்தை முற்றிலும் நிறுத்தி வைத்தேன். நான் புன்னகைத்து அவர் புன்னகைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வியை ஒத்தி வைத்தேன். இதுதான் எனக்கு முதல் வெற்றி. உலகம் அவ்வளவு மோசமானதல்ல என்று கண்டுகொண்டேன். நான் சிரித்தால் யாரும் முறைத்துக்கொண்டு போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களில் சிலர் என்னை விட இண்ட்ரோவெர்ட்டாக இருந்தார்கள். நாளாக நாளாகப் புன்னகையின் அளவை நீட்டித்துக்கொள்கிறேன். இது ஒருமாதிரியாக எனக்கு நன்கு உதவியது.
- நிமிர்ந்த நன்னடை
நெருப்புக்கோழி மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக்கொள்வதைப் போல, தூரத்தில் யாரேனும் தென்பட்டால், இங்கேயே தலையைக் குனிந்துகொண்டு வேகமாகக் கடந்துவிடும் பழக்கம் தொட்டில் காலத்திலிருந்தே உண்டு. இப்போது அதனைச் சற்று மாற்ற முயற்சி செய்கிறேன். புன்னகை தாண்டியும் ஒரு குட்மார்னிங்கையோ, நலமா இருக்கீங்களையாவோ பிரயோகிக்கத் தலைப்படுகிறேன். வராத கணங்களில் குறையேதுமின்றிப் புன்னகையைத் தவழவிட்டுக் கடக்கிறேன். எதிரில் யாரேனும் வந்தால் தரையைப் பார்க்காதே என்ற தாரக மந்திரம் ஒருவாறாகச் சரியாக வருகிறது.
- அகப்பேச்சு
இது தானாகவே அமைந்தது. கதையோ, அல்லது படித்தவற்றை அலசுதலோ எதுவாயினும் விட்டத்தைப்பார்த்துப் பேசுதல் என்பது சிறுவயதிலிருந்தே உண்டு. அதேபோன்றே இந்த கூடுடைதலுக்கான தினசரித் திட்டங்களையும் எனக்குள்ளாகவே சொல்லிப்பார்த்துக்கொண்டு வெளியில் போக ஆரம்பித்தேன். மனத்திற்குள் போட்டு வைத்த அந்தத் திட்டங்கள் கண்முன்னே நிறைவேறும்போது மகிழ்வு பெருகியது. சொதப்பாதடா என மனம் சத்தம் போட்டு அலறும்போது முகம் புன்னகைத்து எதிரில் வருபவர்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறது.
- உரையாடல் திட்டங்கள்
எழுத்துதான் எனக்கு உற்ற நண்பன் ஆதலால் முக்கியமான சந்திப்புகள், நிறையபேர் கலந்துகொள்ளும் விழா அல்லது கூடுகை என்றால், என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வரிசையாக எழுதி வைத்துக்கொள்கிறேன். உரையாடலைத் தொடங்குவதுதான் பிரச்னை என்பதால், அதற்கான சில குறிப்பிட்ட வாக்கியங்கள், சகஜமாகச் செல்லும் வழிகளைக் குறித்துக்கொண்டு அதன்படி செயல்படுகிறேன். முழுமையாகவில்லை என்றாலும் ஆங்காங்கே ஒளி தெரிகிறது.
- எக்ஸ்ட்ரோவெர்ட் நட்பு
மேற்கண்ட ஐந்தும் சில நேரங்களில் நடக்கிறது. பல நேரங்களில் இன்னும் வெகுதூரம் போகவேண்டும் என்று உணர்த்துகிறது. ஆனால் முற்றிலும் வெற்றிகரமாகத் திகழ்வது இதுதான். பிறக்கும்போதே புன்னகையையும், சகஜ மனநிலையும், யார் வந்த போதிலும் துணிந்து எதிர்கொண்டு பேசும் நட்புகளைக் கைக்கொண்டிருக்கிறேன். இவர்களோடு போனால் சில சமயங்களில் நான் இண்ட்ரோவெர்ட் என்பதையே மறக்கச்செய்யும் வண்ணம் செய்கைகள் செய்வார்கள். அந்த நிழலில் ஒதுங்கிக்கொண்டு நான் பாட்டுக்கு என் அகப்பேயோடு கூத்தாடுதல் பெருமகிழ்வு.
ஆகவே, இதைப்படிக்கும் வாசகர்கள், நண்பர்களில் என்னைச் சந்திக்க நேர்ந்தால் சற்று அவகாசம் கொடுக்கவும். அந்த முதல் நொடித்தடங்கலைக் கடந்து நிச்சயம் ஆசுவாசமாகி உரையாடலைத் தொடங்கிவிடுவேன். புரிதலுக்கு நன்றி
இதைப் படிப்பவர்களில் நிச்சயம் இண்ட்ரோவெர்ட்கள் இருப்பீர்கள். அதைக் கடந்து வர நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறையையும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a comment