எளிய கதைகளை எழுதுவதை விட, கிளாசிக்குகளை, உங்கள் மொழியை, சிந்தனையைச் சவாலுக்கு உட்படுத்துகிற கதைகளை எழுதுங்கள் என்கிறார் சல்மான் ருஷ்டி. இதனை ‘Work Close to the Bull’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பகுதியாகத் தன்னுடைய மாஸ்டர் க்ளாஸில் சொல்லிக்கொடுப்பார். காளைச்சண்டையை மேடையிலிருந்து காண்பதை விட, களத்தில் இறங்கிச் சவாலைச் சந்தித்துப்பார் என்பது உட்பொருள்.
வெளிவரவிருக்கும் என்னுடைய புதிய fantasy fiction நாவல் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியரிடம் முதன்முறையாக விவரிக்கச்சென்றேன். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் இரண்டு நூற்றாண்டுகள், எட்டு தலைமுறைகள் தொடரும் ஒரு நீண்ட கதையைச் சொன்னேன். இரண்டு நிமிடங்கள் கண்கள் மூடி யோசித்தார். அதில் இருந்த முதற்பாதியை ‘மட்டும்’ எடுத்துக்கொண்டு அதைத் தனி நாவலாகச் செய்யுமாறு சொன்னார். அப்போது பயந்தேன். அதற்கான மொழிக்கும், கற்பனைக்கும் பெரிதும் மெனக்கெட வேண்டும். இன்னும் ஆராய்ச்சி செய்யவேண்டும். தயங்கினேன். இப்படி எழுதினால் கிளாசிக். அப்படி எழுதினால் பல்ப். இதைச் செய்வதுதான் முறை என்றார்.
அது நான் முதலில் எதிர்கொண்ட காளைச்சண்டை. மனத்தடை, அச்சத்தடை, உடற்தடை, செயல்தடை. மொழித்தடை, கற்பனைத்தடை என ஒவ்வொன்றையாக உடைத்து வெற்றிகரமாக எழுதி முடித்தேன். சல்மான் ருஷ்டி சொன்ன இந்தக் கூற்றின் பொருள் மைதானத்தில் இருக்கும்போதுதான் விளங்கியது. அது தந்த நிறைவு அளப்பரியது.


Leave a comment