மழை – ஓர் ஓவியம், ஒரு சினிமாக்காட்சி, ஒரு கவிதை

மழை வரும் முஸ்தீபுகள் தெரிந்ததால், இன்று அதிகாலையிலேயே நடையைத் தொடங்கினேன். ஒரு சுற்று நிறைவதற்குள்ளாகவே வலித்துப் பெருகிப் பொழிந்தது. உடனே வீட்டிற்குச் சென்றுவிடாமல் மழை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

சென்ற வாரம் உயர்நீதிமன்றச்சாலையில் பூந்தூவலாய்ப் பொழிந்த தூறலில் மகிழ்வோடு நனைந்தது. சென்ற மாதம் மலையேற்றம் சென்றபோது போர்த்திமந்து அணையின் மேல் ஒதுங்க இடமின்றிக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழையில் நனைந்தபடியே நடந்த நினைவு . அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பழனி மலை அடிவாரத்தில் காவியணிந்த யாசகர்கள் சூழ வீற்றிருந்த ஒரு சிறுகுடிலுக்கு முன்னால் நின்று மழையை ரசித்த ஞாபகம் எல்லாம் வந்துகொண்டிருந்தன.

இப்படி வரிசையாக நினைவின் பின்னோக்கிச் சென்று ஒவ்வொரு மழைபெய்த பொழுதையும் மிகத் துல்லியமாக மனம் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறது. வளரிளம் பருவம் முழுவதுமே வருடம் முழுதும் மழை பெய்யும் பூமியில் வளர்ந்ததால், அது தரும் பேரானந்தம் எப்போதுமே அளப்பரியது.

மழையைச் சிந்தித்துக்கொண்டிருந்ததில் ரஷோமான் திரைப்படத்தின் முதல் காட்சியும் நினைவுக்கு வந்தது. கூரையைப் பிய்த்துக்கொண்டு, கற்படிகளில் ஓடிச்செல்லும் மழை. அங்கிருந்துதான் அந்தக் கதை தொடங்குகிறது. ஜப்பானியர்களின் வாழ்வில் மழை மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்று. அவர்களின் கலைகளிலும் மழையைக் கொண்டுவருவது மிக முக்கியமான சடங்கு. அவர்களின் ஓவியங்களிலும் மழைக்காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

அகிரா குராசேவாவின் ரஷோமான் பற்றி அறிந்து கொண்ட நாளிலேயே நான் ஷோட்டே தகாஹஷியின் (Shotei Takahashi) மழையில் நனையும் கிராமம் – இகுசா என்ற ஓவியத்தையும் கண்டுகொண்டேன். திரைப்படத்தை எனக்கு அறிமுகப்படுத்திப் பேசிய அண்ணா இந்த ஓவியமே அகிராவின் அந்த முதல் காட்சிக்கு ஆதாரமாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்லியிருந்தார். ஆகவே அதையும் இதையும் எப்போதும் இணைத்தே சிந்திக்கிறேன்.

இயற்கையை அறிந்துகொள்ளச்சொல்லும் பௌத்த ஞான மரபின் இரண்டு காலம் கடந்த உதாரணங்கள். இரண்டையும் அலைபேசியில் தேடி எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னணியில் பாரதியின்

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

எனும் கவிதை வரியின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது.