எழுத்தாளர் டான் பிரவுனின் (Dan Brown) மாஸ்டர் கிளாஸ் வகுப்பில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்து கற்றிருக்கிறேன். அதில் ஒரு திரில்லர் நாவல் எழுதுவதற்கான பல சுவாரசியமான தகவல்களையும், நுட்பங்களையும் பகிர்ந்திருந்தார். அதில் நெடுநாள்கள் மனத்தில் நிற்பது இந்த 3C கோட்பாடு.
ஒரு வாசகனை நாவலுக்குள் இழுத்து வைத்துக்கொண்டு அவன் திருப்திக்கு விருந்து வைப்பதில் இந்த மூன்று C க்களுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்கிறார்.
- Contract
- Clock
- Clausible
என்பது அவர் சொன்ன மூன்று விஷயங்கள். இதனை எளிமைப்படுத்தி ‘வாக்கு, க்ளாக்கு, தாக்கு’ என்கிற பொது வாக்கியம் ஒன்றை உருவாக்கி மனத்திற்குள் இருத்திக்கொண்டேன்.
வாக்கு – நம்மைத் தேடிவரும் ஒவ்வொரு வாசகனுக்கு ஓர் உறுதிமொழியை, உத்தரவாதத்தை அளிப்பது. நான் எடுத்துக்கொண்டிருக்கும் கதைக்கருவை, எந்தச் சேதாரமுமின்றி, எந்தக் குழப்பமும் இன்றி, வாசிக்கச் சுவாரசியம் மிக்கதாக உனக்கு அளிப்பேன் என்ற வாக்கு. இங்கிருந்தே ஒரு படைப்பு நேர்மையானதாக, படிப்பவனைச் சற்றும் தளரவிட்டுவிடாத ஒன்றாக அமையும்.
க்ளாக்கு (clock) – ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயம் முக்கியம். நாயகனோ, நாயகியோ ஒரு தேடலையோ, கண்டுபிடிப்பையோ தன் வாழ்நாள் முழுதும் நிகழ்த்தலாம் என்று கதையின் மையத்தை வைத்துக்கொண்டால், வாசகனும் பிறகு படித்துக்கொள்ளலாம் என்று தூக்கி வைத்துவிட்டுப் போய்விடுவான். அதனை விடுத்து பௌர்ணமிக்குள் மலையேறாவிட்டால், மலை ஒரு பாம்பாக மாறி அவனை விழுங்கிவிடும் என்பது போன்ற ஒரு டைம் பாமை வைக்கும்போது அவனும் கதைக்குள் சுவாரசியமான பங்காளியாக நுழைந்து விடுவான்.
தாக்கு – கதையின் நாயகன் அல்லது நாயகி எப்போது மாதம் மும்மாரி பொழிந்து கொண்டிருக்கும் ஊரில் வாழவே கூடாது. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாடிக்கொண்டே இருத்தலும் கூடாது. அவனுக்குச் சவால்கள் முக்கியம். மிக மிக ஆபத்தான கட்டத்தில் கொண்டுபோய் அவனை இருத்துதல் முக்கியம். மிகக் கடினமான சந்தர்ப்பங்களில் அவனை இதுவா அதுவா என்ற முக்கிய முடிவை எடுக்க வைத்தல் முக்கியம். ஆகவே அவன் தாக்கப்பட்டே தீரவேண்டும்.
பெரும்பாலும் எல்லா வெற்றிபெற்ற கதைகளிலும் இந்தப் பயன்பாடு உறுதி செய்யப்பட்டிருக்கும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் இது நம் வாழ்க்கைக்குமே பொருந்தக் கூடிய ஒரு தர்க்கமாகவும் இருக்கிறதுதானே? நாம் எல்லோர் வாழ்வுமே வாக்கும், க்ளாக்கும், தாக்குதலை எதிர்கொள்வதுமாக ஒரு நாவலுக்கு இணையான ஒரு மையத்தைக் கொண்டுதானே இயங்குகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Leave a comment