இன்று அதிகாலையில் நான் எழுதிப் படிப்பதாகப் போட்டிருந்த ஒரு வீடியோவைச் சுட்டி என் பள்ளி நண்பர் ஒருவர் ’இன்னும் பேனா பேப்பர்லாம் வச்சு எழுதுறியா? என்று கேட்டிருந்தார். கூடவே,. அப்படி என்னதான் எழுதுவ? எதுக்கு அவ்ளோ நோட். ஏன் இவ்ளோ கலர்ல பேனா? என்றும் துணைக்கேள்விகளை அடுக்கியிருந்தார்.
எனக்கு அடிப்படையிலேயே எழுதிப்படிக்கும் பழக்கம் பள்ளி நாள்களிலிருந்தே உண்டு. படிப்பதை விட, எழுதினால் மனதில் பதிகிறது என்பதுதான் முதன்மைக் காரணம். அது பின்னாளில் ஆய்வுப்புத்தங்கள், தத்துவப் புத்தகங்களை வாசிக்கும்போதும் தொடர்ந்தது. முக்கியமான தகவல்களைச் சிறு குறிப்புகளாக எடுத்துக் கொள்வது. அதனை ஒருமுறை பார்த்து எழுதுவது. பின்பு படித்து முடித்த பிறகு நினைவிலிருந்து அந்தச் சிறுகுறிப்புகளை விவரித்து எழுதுவது என இரண்டு பாகங்களாக எழுதுகிறேன். இதன் மூலம் படிக்கும் எந்தப் புத்தகத்தின் தரவுகளும் என்றும் மறவாமல் மனதில் பதிந்திருக்கும். ஆகவே படிக்கும் முக்கியமான புத்தகங்கள் எல்லாவற்றிற்கும் இதுபோன்ற குறிப்பேடுகள் வைத்திருக்கிறேன்.
ஆசிரியரைச் சந்தித்துவிட்டு வரும்போது அவர் சொன்ன அறிவுரைகள், எழுதுதல் பற்றிய குறிப்புகள், உதாரணங்கள், நுட்பங்கள், அவரின் அனுபவங்கள் யாவற்றையும், சந்திப்பு முடிந்த அன்றே விரிவாக எழுதிவைத்துக்கொள்கிறேன். ஏனெனில் சில சின்ன விஷயங்களை மனம் அப்போதே மறந்துவிடும். மீண்டும் யோசித்து அசைபோட இது போன்ற குறிப்பு கைகொடுக்கும். என்றேனும் எழுத்து வராமல் அடம்பிடித்தால், இந்த அனுபவக்குறிப்புகள் உடனடி நிவாரணியெனக் கைகொடுக்கும். (இது பிற எழுத்தாளர்கள், ஆய்வறிஞர்கள், மேதைகளின் சந்திப்புக்கும் பொருந்தும்)
அல்புனைவாகக் கட்டுரைகள் எழுதும்போது, தரவுகள் சேகரித்து முடிந்தவுடன் எழுபத்தைந்து முதல் நூறு வார்த்தைகளுக்குள் அதன் மையத்தைத் தொட முடிகிறதா என்று சோதித்துப்பார்த்து ஒரு குறிப்பேட்டில் கையால் எழுதுகிறேன். இது கணினியில் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நான் செய்து கொள்ளும் பயிற்சி.
தத்துவ வகுப்பு உள்ளிட்ட எந்த வகுப்பிற்குச் சென்றாலும் வகுப்பு இடைவேளைகளில் குறுங்குறிப்புகளும், அந்த நாள் முடிவில் அதனை விவரித்து எழுதுவதையும் தொடர்ந்து செய்கிறேன். இப்படிச் சேகரித்து வந்த குறிப்புகளை மனதிற்குள்ளேயே வரிசைக்கிரமமாக சொல்ல வருகிறதா என்று சோதனை செய்து கொள்கிறேன். ஒரு வார இடைவெளியில் மீண்டும் பார்க்காமல் எழுதிப்பார்க்கிறேன். இது படித்தது மறக்காமலிருக்கவும், பின்பு நீண்ட நாள் நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் இதுபோன்று தனித்தனிக் குறிப்பேடுகள் உள்ளன.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலிருந்து தினமும் ஒரு பிரபந்தத்தை சொல்லிக்கொண்டே எழுதுகிறேன். இது சொற்சுவையினை அதிகப்படுத்தி மகிழ்விக்கிறது. ஒருவிதத்தில் எனக்கு மொழிப்பயிற்சியாகவும் உதவுகிறது. பின்னர் புதிய சொற்களை எழுத்தில் கொண்டுவரவும் கைகொடுக்கிறது.
இதைத் தவிர தினசரி எழுத்து சார்ந்த ஒரு ஜர்னலையும், சொந்த வாழ்க்கை சார்ந்த ஒரு ஜர்னலையும் நிர்வகிக்கிறேன். இவை இரண்டையும் காலை எழுந்தவுடன் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக எழுதிவிடும் சுருக்கக் குறிப்புகளுக்காக வைத்திருக்கிறேன்.
குறிப்புகளை எழுதும்போது முக்கிய, மிக முக்கிய, தொடர்ந்து கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்களை வெவ்வேறு வண்ணங்களால் குறிக்கிறேன். ஆகவே எல்லா நிறத்திலும் வண்ணப்பேனாக்களும் வாங்கி வைத்திருக்கிறேன். இந்தத் தொடர் பழக்கங்களினால், இடையில் தொய்ந்து போயிருந்த என் கையெழுத்து இப்போது பழைய நிலைக்கு வந்திருக்கிறது. நினைவாற்றலின் திறன் சற்று அதிகரித்திருக்கிறது. தடையில்லாமல் கணினியில் எழுத உதவி செய்கிறது.
நீங்களும் தினமும் கையால் எழுதுபவரா? உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

Leave a comment