அமியின் ஜெமினி

நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்தவன். ஆகவே காடு புகுதல் என்பது தினசரிச் செய்கையாக இருந்தது. அப்போதெல்லாம் சிந்தனை மொத்தத்தையும் விழிகளில், செவிகளில் கொண்டு குவிப்பதற்குப் பயிற்சியளித்திருப்பார்கள். ஏனெனில் திடீரென ஒரு முயல் கடக்கும். சட்டென ஒரு மான் தாவி ஓடும். புலி பாயலாம். கரடி தாக்கலாம். அது வரை பார்த்திராத ஒரு வண்ணப்பறவை பறந்து போகும். இது போன்ற சந்தோஷங்களும், அதிர்ச்சிகளும்தான் வனம் புகுதலின் ஆதாரமே . ஆகவே மொத்தக் கவனத்தையும் விழியில் கொண்டு குவிப்பது நல்லது. ஒரு தியானம் போலத்தான் அதுவும்.

கிட்டத்தட்ட இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அந்தத் தியானத்தை ஒத்த கவனத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. என்றால் கடினமான பல்லை உடைக்கிற, யோசிக்கிற வைக்கிற மொழியெல்லாம் இல்லை. எளிய மொழி. ஒரு மேனிலைப்பள்ளி மாணவன் கூட எளிதில் வாசிக்க முடிகிற ஆங்கிலம். ஆனாலும் அந்த எளிமைக்குள் பொதித்துவைத்திருக்கிற சூசகம், கிண்டல், ஆற்றாமை. கோபம், என உள்ளுறை பிரம்மமாகப் பொதிந்திருக்கும் விஷயங்கள்தான் அந்த எழுத்தை அத்தனை கவனமாகப் படிக்கக் கோருகிறது. சற்று வேகமாகப் பக்கத்தைப் புரட்டினால் கூட ஒரு நுண்ணிய தரிசனத்தை இழந்து போயிருப்போம்.

Fourteen years with boss என்கிற இந்தப்புத்தகத்தை அனேகமாக மூன்று வருடங்களுக்கு முன்பே வாங்கி வைத்திருக்கிறேன். இதற்கு நேரடியான ஒரு தமிழ்ப் புத்தகமும் உண்டு. அது பதிப்பில் இல்லை. விரைவில் வந்துவிடும் என்றார்கள். மொத்தமாக அசோகமித்திரன் கட்டுரைகள் மீண்டும் பதிப்பித்து வரும்போது இதுவும் அதில் இருக்கும் என்றார்கள். காத்திருந்து வெறுத்துப்போய், இதையே படிக்க ஆரம்பித்தேன். இத்தனை நாள் படிக்காததற்காக என்னையே நொந்து கொண்டேன்.

ஆசிரியர் பாரா, அசோகமித்திரன் இறந்த தருணத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதைச் சிறு குறிப்புகளாக எழுதி வைத்திருந்தேன். அதில் இருந்த ஒரு வாக்கியத்தை இந்தப் புத்தகம் வாசித்த பிறகு முழுமையாக உணர்ந்தேன்.

‘எந்த ஒரு தமிழ் எழுத்தாளரும், எக்காலத்திலும் ஆணவம் கொள்ளவே முடியாமல் கதவை இழுத்து மூடச்செய்கிற ஒரு வேலை’

அவர் மொத்த அசோகமித்திரன் படைப்புலகையும் முன்வைத்து அப்படிச்சொன்னார். இந்த ஒரு புத்தகம் போதும். அடுத்து ஒன்று எழுதும்போது எப்போதும் மேற்சொன்ன வாக்கியம் இருந்துகொண்டே இருக்கும். எழுத்தை நேசிப்பவர்கள் அனைவரும் தவறவிடக்கூடாத புத்தகம்.

Leave a comment