இந்தக்குகை இன்னும் எத்தனை நீளம் என்று தெரியவில்லை. வாழ்நாள் மொத்தமும் இந்த இருட்டிலேயே கடக்கவேண்டுமோ என்ற பயம் வந்தது. எங்கேயோ நீர்ப்பூச்சிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. புகை வாசனையும், பச்சை நாற்றமும் கலந்து வீசின. அது இன்னும் அதிகரித்தால் சுவாசம் அடைக்குமோ என்ற அச்சமும் வந்தது.
அப்போதுதான் அந்தப் புள்ளிகளைக் கண்டேன். பாலே நடன மங்கைகள் போலச் சுழன்று சுழன்று ஆடித்திரிந்து எதிரில் வந்துகொண்டிருந்தன. நிறங்களைப் பற்றிச் சிந்திக்க மனதுக்கு வலுவில்லை. வெண்மையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருப்பதாக எண்ணிக்கொண்டால் நிம்மதியாக இருந்தது. குரலற்ற என் இறைஞ்சலைக் கண்டுகொண்டு உனக்கு வழிகாட்ட உதவுகிறோம் என்றன. அதற்குக் குரல் இருந்ததா. யோசிக்க முடியவில்லை. ஆனால் செய்தி வந்தது நிஜம்.
யார் முன்னே செல்வது என்று போட்டுக்கொண்டு எனக்கு ஒளிகாட்டி ஓடிக்கொண்டிருந்தன. கால்கள் அதன் வேகத்திற்குப் போட்டி போடமுயன்று தோற்கிறது.
ஒருவேளை வேகமாகப்போய்விட்டால் வெளிச்சமிராதே என்று மனதின் கவலையை ஒளிப்புள்ளிகள் உள்வாங்கிக்கொள்கின்றன. ஒன்றனுக்கு இரக்கம் அதிகம். அது என் கால்களை நீவி இன்னும் வேகமாக வா என்று சொல்லி அதற்கு விழியெனத் தொடர்கிறது. இரண்டு புள்ளிகள் தோளுக்கொன்றாக அமர்ந்து கொள்கின்றன. ஒன்று முகத்திற்கு நேரே அலைந்து நெற்றியா, உச்சந்தலையா என்று யோசித்து, புருவ மத்தியில் அமர்ந்து கொள்கிறது. கால்களுக்கு வேகம் வந்தவுடன் மனம் சிந்திக்க வலுக்கொள்கிறது. கால்களுக்கு வழிசொல்லும் ஒளிப்புள்ளி மஞ்சள். தோள்களிரண்டில் சிவப்பும், பச்சையும். புருவமத்தியில் நீலம். நிறங்கள் புரிகின்றன. மனம் உடல் இரண்டும் வேகம் கொள்கிறது.
தூரத்தில் குகை முனை தெரிகிறது. போதும், இனி என் காலுண்டு, மனமுண்டு, நானுண்டு. வெளிச்சப்புள்ளிகள் வேண்டாமெனத் தோன்றுகிறது. காலை, தோளை, முகத்தை உலுக்கி வெளிச்சப்புள்ளிகளை உதறுகிறேன். இருள் முடியும் தருணம் வந்துவிட்டது என உள்ளம் குதூகலிக்கிறது. இதோ இன்னும் சில நிமிடங்களில் முற்றிலும் வெளிச்சலோகத்தில் நுழைவேன் என்று உள்ளம் கூத்தாடுகிறது. மனவேகத்தில் உடலையும் இயக்க நினைக்கிறேன். நினைக்கும்போதே குகையை அடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது நீல நிற ரயில். புகையும், ஒளியும் நிறைய ஸ்தம்பித்து நிற்கிறேன். நான்கு வெளிச்சப்புள்ளிகளும் ரயிலின் முகப்பில் அமர்ந்துகொண்டு சிரிக்கின்றன.
#காட்சிப்பிழை #hallucination

Leave a comment