இன்று தாம்பரம் சான் அகாடமி பள்ளியில் reading for development என்னும் தலைப்பில் ஓர் உரையாற்ற அழைத்திருந்தார்கள். பாடப் புத்தகங்கள் தாண்டி, மாணவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவது, அதன் தேவையை அவர்களுக்குப் புரியவைப்பது, அதனால் ஏற்படும் நீண்ட காலப்பயன்கள் பற்றி விளக்கமாகச் சொல்வது என்பது ஏற்பாடு.
இதனை முழுக்க என்னுடைய பேச்சு, ப்ரசண்டேஷனாக மட்டும் இல்லாமல் எல்லோரும் பங்குபெறும் இயல்பான கலந்துரையாடலாக மாற்றி அமைத்துக்கொண்டு உரையாடினேன். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதக் குழந்தைகள் ஏற்கனவே பள்ளிப்பாடம் தாண்டிய வாசிப்புக்கு பழகித்தான் இருக்கிறார்கள். ஃபேண்டசி ஃபிக்ஷன், காமிக்ஸ், விளையாட்டு வீரர்களைப் பற்றிய புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் என்று ரசனை ஒருவருக்கொருவர் வேறுபட்டாலும், பாதிக்குப் பாதி பேர் நிச்சயம் படிக்கிறார்கள் என்பதே நிம்மதியாக இருந்தது.
மீதமுள்ள மாணவர்களுக்கும் இவர்கள் ஏன் வாசிக்கிறார்கள் – அது எப்படி அவர்களுக்கு உதவி செய்கிறது என்பதை இவர்கள் பகிர்ந்த அனுபவங்களைக் கொண்டே ஊக்கப்படுத்த முடிந்தது. நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். நிறைய புதிய துறைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். தயக்கமின்றித் தங்களின் மனக்கிடக்கையை உடைத்துப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு கருத்தை உள்வாங்கிக்கொண்டு யோசித்து, அது சரியாக இருக்காதே என்று எதிர் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அதை விளக்கிச் சொன்னவுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
புன்னகையும், உற்சாகமுமாய் இரண்டு குழுக்களுடன் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் உரையாடினேன். அவர்களுக்குச் சில விஷயங்கள் கற்றுக் கொடுக்கப் போய் நானும் நிறையக் கற்றுக்கொண்டு வந்தேன். மிக நிறைவான நாளாக அமைந்தது.

அது பற்றிய பத்திரிகைச்செய்தி


Leave a comment