அவனுக்கு அந்தச் சந்தேகம் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் அமானுஷ்யங்களில் நம்பிக்கை கொண்டவன். பேய்க் கதைகள் எழுதுபவன். அதனால் அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என நம்பினான்.
விஷயம் இதுதான். தொடர் நாவலின் அன்றன்றைய அத்தியாயங்களை அதிகாலையில் எழுந்துதான் எழுதுவான். தினமும், நள்ளிரவு அலுலக வேலைகள் முடிந்து தூங்கப் போகும் முனபு ஒரு காரியம் செய்வான், கணினியில் புதிதாக ஒரு கோப்பைத் திறந்து அத்தியாய எண்ணை எழுதி, அதன் முதற்சொல்லையோ, இரண்டு வாக்கியங்களையோ, ஒன்றும் தேறவில்லையென்றால் அத்தியாயத்திற்கு எழுத வேண்டிய குறிப்புச் சொற்களையோ எழுதி வைத்துவிட்டு, கணினியை அணைத்துவிட்டுத் தூஙகப்போவான். சில மணி நேரத் தூக்கத்திற்குப் பிறகு அதிகாலையில் எழுந்து அத்தியாயத்தை எழுதி நிறைவு செய்துவிடுவான்.
சில நாள்களாகத்தான் அந்தப் பிரச்னை. வழக்கமான இரவுப் பணிகளுக்குப் பிறகு, அதிகாலையில் கணினியைத் திறந்தால் அந்த அத்தியாயம் எழுநூற்றைம்பது வார்த்தைகள் வரைக்கும் வளர்ந்திருக்கும். வியந்து போவான். ஆனால் ஒவ்வொரு சொல்லும் அவன் எழுதியது போலவும், அவன் கதைதான் என்பதாலும், மீதமுள்ள பத்திகளை எழுதிச் சரிபார்த்து பப்ளிஷ் செய்துவிடுவான். ஆரம்ப நாள்களில் இதை தூக்கக் கலக்கத்தில் தானே இரவில் எழுதி மறந்துபோயிருக்கிறோம் என்றே எண்ணியிருந்தான்.
ஆனால் நாள்கள் நகர நகர நாவல் இவன் போக்கை விட்டு விலகிச்செல்லவே கவலை கொண்டான். நிச்சயம் ஏதோ ஒரு சக்தி தன் கணினியை இயக்குகிறது என்று நம்பினான்.
ஆப்த நண்பனும், கணினிக் கலைஞனுமாகிய ஒரு பிரம்மாஸ்திர நாயகனிடம் பிரச்னையைக் கொண்டுபோனான். ஸ்டாக்மார்க்கெட், டார்க் நெட், அந்நியச் செலாவணி. ஆபாசத்தளம் அப்படின்னு எந்த உருப்படியான காரியத்துக்கும் போகாத அப்பிராணி சைவ பிசியை எந்த டேஷும் சீந்தமாட்டான். மேலும் இதெல்லாம் அவன் மனப்பிராந்தி. தினம் ஆறு மணி நேரம் கூட தூங்கவில்லையென்றால் அனுதினமும் நினைவிலேயே அமானுஷ்யம் நிகழும் என்று சொனான்.
என்றாலும் எழுத்தாளனின் பாவ முகத்தை மன்னித்து, டேட்டாவைப் பிரதியெடுத்து, கணினியை முற்றும் கழுவிக்கவிழ்த்து, புதிய ஆபரேட்டிங் சிஸ்ட தெய்வத்தைச் சேர்த்து, இன்னும் சில சிறுதெய்வ வைரஸ் எதிர்ப்பான்களை நிறுவிக், இரண்டு கைகளையும் தலைமேல் தூக்கிக் கும்பிட்டு வழியனுப்பிவைத்தான்.
எழுத்தாளன் இன்றிரவு ஒரு உபாயம் செய்தான். ஒரு கோப்பை உருவாக்கி அத்தியாய எண்ணை மட்டும் போட்டு, சேமித்தான். அன்றாடச்செயல்களைக் குறிப்பெடுக்கும் நோட்டுப்புத்தகத்தில் இன்றிரவு ஒன்றும் எழுதவில்லை என்று எழுதிவைத்துவிட்டுத் தூங்கப்போனான்.
அதிகாலை அலாரம் அடிக்காமலேயே பரபரப்பாக எழுந்து வந்து கணினியைத் திறந்தான். கோப்பு இன்னும் காலியாகத்தான் இருந்தது. நிம்மதியாக இருந்தது. எல்லாமே மனம் செய்த மாயை என்று தெளிந்தான். நிம்மதியாக அத்தியாயத்தை எழுதலாம் என்று முடிவு செய்து குறிப்பேட்டை கணினியின் அடியில் இருந்து எடுத்தான். நேற்றைய அவனது குறிப்பில் கீழே, லாரல் பிங்க் நிற எழுத்தில் ‘ஆப்பிள் வாட்சப் மெசேஜ்களுக்கு எழுநூற்றைம்பது கேரக்டர்கள்தான் எல்லை என்றறியாதவன் வாட்சப்பில் நாவல் எழுதவரக்கூடாது’ என்று எழுதியிருந்தது.

Leave a comment