கையில் மலர்ந்த செளகந்திகம்

[2024ம் வருடம் எழுத்தில் என்ன செய்தேன் என்ற தலைப்பில் எழுதிய ஆண்டறிக்கை. அந்த வருடத்தின் கடைசி வாரத்தில் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் பிரசுரமானது]

இந்த வருடத்தின் (2024) முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது.

அமீரகத்தில், ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் குறுநாவலின் கடைசி அத்தியாயத்தின் ஓப்பன் க்ளைமாக்ஸைக் கடிந்து தொலை பேசினார். ’எப்படிங்க ஒரு முடிவு இல்லாம அவளை அந்தரத்துல நிப்பாட்டுவீங்க’ என்று கோபத்தோடு சொன்னார். முகம் தெரியாத ஒருவர் உரிமையோடும், கோபத்தோடும் என்னிடம் அப்படிப் பேசியது அதுதான் முதன்முறை. என்னுள் மட்டுமே உழன்று கொண்டிருந்த ஓர் அகவுலகு, புறத்திலும் இன்னொருவரைச் சென்று சேர்கிறது. நம்மை பாதித்த அளவுக்கு அவரையும் பாதிக்கிறது என்ற மாயச்செய்கை பெரும் அதிர்வுகளைக் கொடுத்தது.

*

சென்ற டிசம்பரிலேயே ஆசிரியர் இந்த வருட அபுனைவுக்கான தலைப்பைக் கொடுத்திருந்தார். கூகுள் வரலாறுதான் கரு. அதற்கான வாசிப்புப் பயிற்சியையும் தரவுத்தேடலையும் ஜனவரி முதல் வாரத்திலிருந்தே செய்து கொண்டிருந்தேன். பதினேழு புத்தகங்கள் படித்து முடித்தேன்., கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அவர்கள் தளத்தில் சேர்த்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகளைச் சேகரித்து வாசித்ததெல்லாம் தரவுத்தேடலுக்கான மிக முக்கியப் பயிற்சியாக இருந்தது.  ஏப்ரல் மாதத்திலிருந்து வாரந்தோறும் மெட்ராஸ் பேப்பரில் ‘G இன்றி அமையாது உலகு’  எழுதத் தொடங்கினேன்.

அல்புனைவின் மீதான என் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்த பருவம் அது. வாரா வாரம் எழுதும் அத்தியாயத்தின் மொழி, மொத்தமாகத் தொகுக்கும்போது தடுமாற்றமடைந்து விடக்கூடாதே என்ற பதற்றம்தான் முதலில் இருந்தது. ஆகவே இதற்கு ஓர் உபாயம் செய்து கொண்டேன். வாரத்தின் மற்ற நாள்கள் மொத்தமும், அந்த வாரத் தலைப்புக்கான வாசிப்பை மேற்கொள்வது. சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு அடுத்த வார அத்தியாயத்துக்காக எழுத அமர்வது. வேறு எந்த கவனச்சிதறலுமின்றி அத்தியாயத்தை அன்று காலை எழுதி, எடிட் செய்து அனுப்புவது என்று தீர்மானம் செய்துகொண்டேன்.

இப்படி சனிக்கிழமை பிரம்மமுகூர்த்த்தில் மட்டுமே எழுதப்படவேண்டும் என்ற விதியால், அதன் மொழி அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஏற்ற இறக்கமில்லாமல் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தது. ஒரே மனம், ஒரே குணம், ஒரே இடம், ஒரே திடம் வேண்டும் என்பதுதான் G புத்தக அத்தியாயங்கள் எழுதுவதற்கு நான் அமைத்துக்கொண்ட விதி. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், முப்பது அத்தியாயங்கள் எழுதி முடித்தேன். இதோ இந்த புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகமாகவும் வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

*

மூன்று வருடங்களாக மனதில் தேங்கியிருந்த நாவல் கருவைப் பல முறை எழுதிப்பார்த்தும் அது ஒட்டுமொத்தமான அனுபவமாகக் கைகூடாமலே இருந்தது. இந்த முறை ஆசிரியரின் ஊக்கம், ஆலோசனை, கண்டிப்பாலும், இறையருளாலும் அதனை எழுதி, நிறைவு செய்தேன். அத்தனை நாள் மனதில் கனன்று கொண்டிருந்த நெருப்பை மொழி வேள்வியாக்கியதில் அடைந்த திருப்தி அளப்பரியதாயிருந்தது. நாவலுக்கான திட்டமிடலைத் தயாராக வைத்திருந்ததால், தினமும் எழுத வேண்டிய அத்தியாயத் திட்டங்களை வகுத்துக்கொண்டேன்.

வேலையையும். எழுத்தையும் பிரித்து வைத்துப் பகுப்பதுதான் முக்கியச் சவாலாக இருந்தது. ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம். எப்படிப் பார்த்தாலும் அதில் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் அலுவலகம் விழுங்குகிறது. தூக்கம் ஆறு மணி நேரமாகக் குறைந்துவிட்டது. மீதம் 6 மணி நேரம் இருக்கிறது. இதில் நான்கு மணி நேரத்தை முற்றிலும் எழுத்திற்கு என்று ஒதுக்கி வைத்ததுதான் இந்த வருடத்தில் எழுத்தில் அல்ல என் வாழ்க்கையின் மிக முக்கிய முடிவு.

காலை எழுந்தவுடன் எழுத்து. 1800 வார்த்தைகள் லட்சியம். ஒன்றரை அத்தியாயங்கள் இலக்கு. முழுமை பெறாமல் காலை உணவு கிடையாது. சமூகத்தளங்களில் உலாவல் கிடையாது. இசை கிடையாது. அரட்டை கிடையாது. என்று முடிவு செய்தேன். ’ப்ரொடக்‌ஷன் இஷ்யூ’ என்று அலுவலகம் சிவப்பு அலாரத்தில் அலறாத மற்ற எல்லா நாள்களிலும் இதைக் கடைபிடித்தேன். அத்தனை வருடம் சேர்த்த தரவுகள் அல்ல. மொழிப்பயிற்சி அல்ல. தேடித் தேடிப் படித்த வாசிப்புப் பழக்கம் அல்ல. எழுத்து ஒழுக்கம்தான் நாவலை முழுமை செய்தது என்று கண்டுகொண்டேன்.

நான் மனதில் வடித்த கதை, என்னையும் மீறித் தானே எழுதிக்கொண்டு சென்றதை அருகில் அமர்ந்து பார்த்த மாயம் நிகழ்ந்தது. என் முதல் நாவல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. வரும் வருடம் முதற்காலாண்டில் வெளிவரும்.

*

தினமும் எழுதுதல் என்ற பழக்கம் வந்துவிட்டபிறகு அதை நிறுத்தக்கூடாது என்று தொடர்ந்து நாற்பது நாள்கள் தினம் ஒரு குறுங்கதையாக எழுத ஆரம்பித்தேன். வாட்சப் சேனலில் மட்டுமே வெளிவந்த அந்தக் கதைகளுக்கு முற்றிலும் புதிய வாசகர் குழுவொன்று கிடைத்தது. என் குடியிருப்புவாசிகள் பலருக்கு நான் எழுதுகிறேன் என்ற விபரம் போய்ச் சேர்ந்தது. அடுத்த சில நாள்கள் காலை நடையின்போது, அவர்களில் சிலர் வழக்கத்திற்கு மாறாய் அணுக்கமாய்ச் சிரித்தார்கள். ஆண்டி வார்ஹோல் சொன்ன பதினைந்து நிமிடப் புகழ் வாய்த்தது.

எழுதிய குறுங்கதைகளில் கருவும், வடிவமும், சொற்சிக்கனமும் கூடி வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. அதில் சில மிக நன்றாகவும். சில மிகச்சுமாராகவும் வந்தன. அந்த வடிவத்தின் மீது மீண்டும் பரிசோதனைகள் செய்த பிறகு இந்த வருடம் மீண்டும் தொடர உத்தேசித்திருக்கிறேன்.

*

இந்த வருடம் ஏழு சிறுகதைகள் மட்டுமே எழுதினேன். காதலர் தினச் சிறப்பிதழுக்காக மெட்ராஸ் பேப்பரில் எழுதிய ‘நீலம் பூத்த வனம்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. குங்குமத்திலும், குமுதத்திலும் கதைகள் வெளிவந்தன. ஆனாலும் திட்டமிட்டு முடிக்காத சிறுகதைகள் பத்துக்கும் மேலாகச் சேர்ந்திருக்கின்றன. அடுத்த வருடம் ஆரம்பித்த சிறுகதைகளை முடித்துவிட வேண்டும்.

*

கிட்டத்தட்ட வருட்த்தொடக்கம் முதல் இறுதி வரை மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதினேன். பெரும்பாலும் நுட்பங்கள் சார்ந்தவை. அது தவிர, புதையல் வேட்டைக் கதைகள் சில, இசைக் ரசனைக் கட்டுரைகள் சிலவற்றையும் எழுதினேன்.

தேர்தல் சமயத்தில் உதயநிதி, சீமான், அண்ணாமலை மூவரையும் வைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதினேன். அண்ணாமலை கட்டுரை வந்த அன்று என் தொலைபேசி ஓவர்டைம் பார்த்தது.. பாராட்டுகளும், வசவுகளும் மாறி மாறி வந்ததில் குழம்பினேன். நீண்டநாள் நண்பன் இன்றோடு உனக்குக் காசு வெட்டிப்போட்டேன் என்று செய்தியனுப்பினான். தமிழ் மீடியத்தில் படித்த அணுக்கத்தோழி ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பித் திட்டினாள். டிவிட்டரில் தேசியக்கொடி டிபி வைத்த பலரும் ’பின்னிட்டீங்க ஜீ’ என்று பின்னூட்டம் போட்டார்கள். என் மேனிலைப்பள்ளித் தேர்வு முடிவு நாளைவிட அதிகக் குழப்பமும் பயமும் வந்த நாள் அது. வெகு நாள்களுக்குப் பிறகு அலைபேசியை சில மணி நேரங்கள் அணைத்து வந்திருந்தேன். வழக்கம்போல அடுத்த இரண்டு நாள்களில் என்னை மறந்துபோய் அடுத்த ஆளை அடிக்கத் தொடங்கியிருந்தார்கள். நான் பிழைத்துக்கொண்டேன்.

இரண்டு வருடங்களில் மொத்தமாக நூற்று ஐந்து கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பருக்காக எழுதியிருக்கிறேன். என் எழுத்தைச் சீர் செய்து, முறைப்படுத்தி, வழிநடத்தியதில் ஆசிரியருக்குப் பெரும்பங்கு உண்டு. அதை நன்றியோடு இந்த வருடமும் நினைவு கூர்ந்தேன்,.

*

இந்த வருடம் வாசிப்பில் மந்தமான வருடம். எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட தலைப்புகளுக்கான புத்தகங்கள் மட்டுமே முழுவதும் படித்தேன். கிளாசிக் எழுத்தாளர்களின் வரிசைகளை வாசிப்பதற்காகத் திட்டமிட்டும் அதில் கால் பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.

அடுத்த வருடம் எனக்கான வாசிப்பு விதி அசோகமித்திரனை முழுமையாக வாசிப்பதுதான். தினமும் 25-50 பக்கங்கள் என்ற எனது தினசரி வாசிப்பு விதியில் இந்த வருடம் விழுந்த ஓட்டையை அடுத்த வருடம் முழுவதும் அடைப்பதே இலக்கு.

*

அடுத்த வருடத்திற்காக இரண்டு நாவல் திட்டங்கள் இருக்கின்றன. ஒன்றிற்கான தயாரிப்பையும், எழுத்துப் பயிற்சியையும் ஏற்கனவே தொடங்கி விட்டேன். இரண்டாவதை வருடத்தின் இரண்டாவது பாதியில் எழுத வேண்டும். ஓர் அல்புனைவு  தலைப்பைப் பிடித்து வைத்திருக்கிறேன். இதற்கான தயாரிப்பு வேலைகள் பார்த்த பிறகு, அதனைக் கோடைக்காலத்தில் எழுத வேண்டும். இந்த மூன்றும்தான் 2025ற்கான திட்டங்கள்.

*

பல வருடங்கள் கனவிலும், நனவிலுமாக என்னுள் நடமாடிக்கொண்டிருந்த ஒரு கதை, தன்னைத் தானே நாவலாக எழுதிக்கொண்டது. உருவெளித் தோற்றங்களாக அகமும், புறமுமாக என்னுடனே நடமாடிக்கொண்டிருந்த பாத்திரங்கள் அனைவரும் நாவலில் அமர்ந்து கொண்டு சிரித்தனர். நான் பெரிதும் நேசிக்கும் நிலம் என் மொழியாலேயே என்னை அணைத்துக்கொண்டு அளவளாவியது.

திரெளபதிக்காக சௌகந்திக மலர் தேடி பீமன் மேற்கொண்ட நெடிய பயணக்கதை ஒன்று மகாபாரதத்தில் உண்டு. கனவால் மட்டுமே தொட்டறியக்கூடிய ஒரு மலரின் மணத்தைத் தேடி நிஜத்தில் அவன் அலையும் கதைதான் அது. அப்படித்தான் இந்த நாவலின் கனவு மையத்தைத் தேடி நான் மேற்கொண்ட பயணங்களும், தேடல்களும், முயற்சிகளும். இந்த வருடம் அந்தக் கனவுச் சௌகந்திகம் என் கையில் மலர்ந்து சிரித்தது, என் முதல் நாவலாக.

இந்த வருடம் நான் எனக்கு வழங்கிக்கொண்ட பெரும் பரிசு அது. மகிழ்ச்சி!

*

நன்றி : மெட்ராஸ் பேப்பர்

.

Leave a comment