திருமணமாகி மனைவிக்கு துபாய் வந்த புதிதில் மெடிகல் டெஸ்ட் எடுப்பதற்காக நாலேட்ஜ் வில்லேஜில் (Knowledge village) ல் இருக்கும் க்ளீனிக்குக்கு கூட்டிச்சென்றிருந்தேன். புதிய இடம், புதிய நாடு, மொழி போதாமை போன்ற கவலைகளால் ஏற்கனவே மிரட்சியாக இருந்த அவரை சற்று பதவுசாகத்தான் ஒவ்வொரு விஷயமாகப்பழக்கிக்கொண்டிருந்தேன்.
இந்த மெடிகல் டெஸ்ட் எடுக்கச்சென்ற இடத்தில் எக்ஸ்-ரே வுக்கான அறையின் வெளியே காத்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கிட்டத்தட்ட கலங்கிய விழிகளுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். என்னவோ ஏதோ என்று ரொம்பவும் பயந்து போனேன். பிறகு மெல்ல காதுக்கருகில், ”எக்ஸ் ரே எடுக்கறதுக்காக தாலியையும் கழட்டணும்கிறாங்க” என்றார் பெருங்கவலை தோய்ந்த முகத்துடனும், கண்ணீர் பெருகிய விழிகளுடன்.
பிறகு அந்த லெபானிய நர்ஸை அணுகி (என்ன ஒரு சருமம் அவருக்கு!! அல்லது ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு) தாலி என்பது தமிழ்ப்பெண்களுக்கு எவ்வளவு பெரிய செண்டிமெண்டல் விஷயம் என்பதையும், புனிதம் என்பதையும், எப்படி திருமண மோதிரத்தை மேற்கு போற்றுகிறதோ அதைப்போன்றே இது தென்னிந்தியாவின் பண்பாடு என்பதையும் வி.சேகர் திரைப்படக்காட்சி போல விவரித்துச்சொன்னேன். மிகுந்த வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு (மனைவியைத்தான்), வெரி சாரி டியர். என்றார்.
அந்த எக்ஸ்ரே வைபவம் அங்கே நல்லபடியாக நிறைந்தது.
ஆச்சா
இன்றைக்கு காலையில் பெரும்பாக்கம் பஞ்சாயத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளச்சென்றோம். 310 தடுப்பூசிகள் அலாட் ஆகியிருந்தன அந்த மையத்திற்கு. கிட்டத்தட்ட 10 பேர்தான் இருந்தோம். அங்கே இருந்த செயலாளர் யாரேனும் சுற்றத்தில் செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் தகவல் சொல்லுங்கள் என்றார். 3 மாதங்களுக்கு முன்னால் திருமணமாகி பெரும்பாக்கத்தில் செட்டில் ஆகியிருந்த மனைவியின் தூரத்து அக்கா பெண்ணை அழைத்து மனைவி விபரம் சொன்னார். சற்று நேரத்தில் அந்தப்பெண்ணும் வந்தது.
சாதாரண முகமன்களுக்குப்பிறகு மனைவி அந்தப்பெண்ணின் காதோரமாக கிசுகிசுப்பாக ( இந்த கிசுகிசுப்புகளையெல்லாம் கேட்பதற்குத்தானே செவிச்செல்வம் எனக்கு வழங்கப்பட்டிருக்கிற்து!) ”தாலி எங்கடி” என்றார் சற்றே பல்லைக்கடித்தவாறே. அதற்கு 97ல் பிறந்த குழந்தை “இந்த வெயில்ல இவ்ளோ டிரஸ்ஸைப்போடறதே எரிச்சலா வர்றது சித்தி இதுல அது வேறயா, சரியான வெயிட் வேற, அதான் வெளில போகும்போது கழட்டி வச்சுட்றது.” என்றது.
சுபம்.

Leave a comment