’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார்.
சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய படங்களின் சாயல்களை எளிதில் நினைவுபடுத்தக்கூடிய கதைதான் என்றாலும் அதனையும் தாண்டி பிரத்தியேகக் காட்சிகளின் மூலமாக இதனை தனிமைப்படுத்தி காட்டியிருப்பது அருமை. தெளிவான திரைக்கதைதான் என்றாலும் இந்த நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் பயணப்படும் திரைக்கதை உத்தி எனக்கு ஏனோ பெரிய உறுத்தலாகவே இருந்தது.
இந்த திரைப்படத்திற்கு ஏன் போகக்கூடாது என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது ஆர்யாவின் குரல்தான். அந்த சோதனை மிக அழகாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பெரும்பாலும் வசனமே கொடுக்கப்படவில்லை. பேசும் இடங்களிலும் ஒரே வாக்கியம் அல்லது வார்த்தைதான். அநேகமாக அவரது முதல் வசனமே முக்கால் மணி நேரம் கழித்துதான் வருகிறது என்று நினைவு. இந்த உத்தி ஒரு பெரிய வாழ்க்கைக்காவலன் (லைஃப் சேவர்). இதற்கு பயந்தே இன்னும் திரைப்படம் பார்க்கப்போகாமல் தவிர்த்த நல்ல உள்ளங்கள் தைரியமாகப்போகலாம். கவலைப்படேல்.
எங்கும் உருத்தாத பழைய மதராசின் காட்சிகள் அருமை. அங்கங்கே இருக்கும் மிகச்சிறிய லோகேஷன் லாஜிக் உதறல்களையெல்லாம் தவிர்த்துவிடுதல் நலம். நீரவ் ஷாவின் கேமிரா மிகச்சிறந்த ஒன்று. செண்ட்ரல் முதலில் 3டி மாடலாக காட்டப்பட்டது போலவே இருந்தது. கடைசிக்காட்சிகளில்தான் செட் போடப்பட்டிருப்பதே தெரியவருகிறது. நல்ல காட்சிப்படுத்துதல்.
ஜி.வி.பிரகாஷின் அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கின்றன. ’ஆருயிரே’ சைந்தவியும், ‘பூக்கள் பூக்கள் தருணம்’ ரூப் குமார் ரத்தோடும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவனை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றாலும் ’ஜிவிபி’ யின் பின்னணி இசை இன்னும் நல்ல தரத்திற்கு வரவில்லை. சுமாரகத்தான் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அடக்கி வாசித்திருப்பதே அழகுதான்.
நல்ல படம். பெரிய திரையில் பார்க்க பல அழகான காட்சிகள் இருக்கின்றன. Very Decent worth a watch

Leave a comment