(இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு எதிர்பாராத பயணத்தின் காரணமாக மிகத் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.)
பதிவர் சந்திப்புகள் ஒன்றிலும் நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை. ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் பயணம்,நிகழ்வுக்கான நேரம் ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதிய பதிவர்கள் அழைத்திருக்கிறார்கள் போகலாமா என்று குசும்பன் (என்றும் அழைக்கப்படுகிற சரவணன் ) கேட்டபோது மகிழ்வோடு ஒத்துக்கொண்டேன்.
சுற்றிலும் வேப்பமரங்கள் அடர்ந்த புல்வெளியில் கராமா பார்க்கில் நிகழ்ந்த்து சந்திப்பு. அருகிலேயே வசிக்கும் திரு.சுந்தர் வலைப்பதிவு கூட்டத்திற்கெனவே பிரத்தியேகமாக எடுத்துவைத்திருந்த மசால்வடையும் சாஸீம் இன்னும் வெகுகாலத்திற்கு நினைவில் நிற்கும்.
புதிய பதிவர்கள், தொடர் வாசகர்கள், ஆசாத் பாய், லியோ சுரேஷ், குசும்பன் மற்றும் அய்யனார் ஆகிய மூத்த பதிவர்கள் என ஒரு சுவாரசியமான உரையாடல் களமாக அமைந்த்து கூட்டம்.
தமிழ் திரட்டிகள் சிலவற்றினை வலைப்பதிவில் இணைப்பதின் மூலமாக வலைப்பதிவு ஒட்டுமொத்தமாக காணமல்போய்விடுவதாகத் தொடங்கியது பேச்சு. பதிவர் கெளதமின் பழைய பதிவில் ஒரு திரட்டியினை இணைத்தன் காரணமாக பதிவு ஒட்டுமொத்தமாக காணாமற்போய்விட்ட்தாகவும் தன்னால் அதனை மீட்க முடியாமற்போனது பற்றியும் பேசினார். இதனைப்பற்றிய awareness வலையில் பரப்புதல் நலம் என்றும் முடிவு செய்யப்பட்ட்து.
திரட்டிகளில் சிறந்த்தாக தமிழிஷ் விளங்குவதாக புதிய பதிவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். இடையே பேசிய ஆசாத்பாய் தமிழ்மணம் வலைப்பதிவுகளின் ஆரம்பகட்ட்த்திலிருந்து செய்திருக்கும் சேவையைப்பற்றி எடுத்துரைத்தார்.
கண்ணா,செந்தில்,கலையரசன் ஆகியோருக்கான வலைப்பதிவு பற்றிய உரையாடலில் பின்னூட்டங்கள் எப்படி வருகின்றன, பொதுவான பின்னூட்ட உத்தி என்ன என்பது குறித்த சுவாரசியமான (ஆனால் எழுத்தில் கொண்டு வரமுடியாத) உரையாடல் நிகழ்ந்த்து. மூத்த பதிவரான ஆசாத் பின்னூட்டங்களை கருத்தில் கொண்டு எழுதுதலை விட எழுதும் விஷயத்தில் (content) ஆர்வம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே அய்யனாரின் வேண்டுகோளின்படி எல்லோரும் அவரவர்களின் வலைப்பதிவு விபரங்கள், பிறந்த ஊர் தொடர்பான விபரங்களை பகிர்ந்துகொண்டோம்.
பதிவர் சுந்தர் அவர்கள் கர்நாடக இசை பற்றிய பேச்சு வந்தபோது ‘அருணா சாய்ராம்’ அவர்களின் சுவாரசியமான வாழ்க்கைக்குறிப்பு ஒன்றை வழங்கினார். தான் ஒரு பழையதுபாய்வாசி என்றும் என் பேச்சில் துபாயின் குறைகளைவிட நிறைகளே அதிகம் தொனிக்கும் என்று கூறினார். மிகுந்த அனுபவசாலிகளிடம் கேட்டுக்கொள்ள நிறைய இருப்பதை அவரது பேச்சு முற்றிலும் உணர்த்தியது.
திரு.அஷோக் என்னும் நண்பர் கலந்துகொண்டிருந்தார். பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவரான அவரை ஆசாத் பாய் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஒவியரும் ஒரு சோஷியலிஸ்ட்டும் ஆவார். நிறைவாகப்பேசினார். வழக்கமான கும்மிகளை விட்டு பதிவுலகம் சற்றே தன்னை மெருகேற்றிக்கொள்ள் வேண்டும் என்னும் அவாவை வெளிப்படுத்தினார்.
திரு.ஆசாத் அவர்களின் தீவிர வாசகனாகிய எனக்கு அவருடனான முதல் சந்திப்பு பெரிதும் உபயோகம் மிக்கதாகவும், மிகுந்த வாஞ்சையுடன் சக மனிதர்களை அவர் அணுகும் பாங்கினை நினைத்து மகிழ்வதாகவும் அமைந்த்து. தன்னுடைய புத்தகங்கள் பற்றியும், வலையுலகில் தன்னுடைய எழுத்துக்கள் பற்றியும் சிறப்பாக பேசினார். அவருடைய ஆங்கில விமர்சன்ங்க்ள்தான் எனக்கு ஆங்கில புத்தகங்கள்பால் ஆர்வத்தினை கொண்டுசென்றன என்று கூறினேன். தொடர்ந்து தான் அதில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார்.
லியோ சுரேஷ் தனது வலையுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். உலக அரசியல் பற்றிய தெளிவான பார்வை அவருக்கு இருக்கிறது. லெபனான் தேர்தல் பற்றியும், துபாயிலிருந்து லெபனானுக்கு பயணிக்கும் லெபானியர்களின் எண்ணிக்கையையும் அதன் பின்னணியிலான ‘திருமங்கலம் தேர்தல்’ பாணி அரசியலையும் விவரித்தார்
அய்யனார் தனது பேச்சில் வழமையான கொண்டாட்டத்துடன் ஆரம்பித்தார். பொறுப்புள்ள வாசகனை உருவாக்கும் தமிழ்சூழலும், வலையுலகும் உருவாக வேண்டும் என்பதே அவரது பேச்சின் அடிநாதமாக இருந்த்து.
குசும்பனுக்கு மட்டும் பின்னூட்டங்கள் வானளாவ உயர்ந்துகொண்டுபோவதைப்பற்றி அனைவரும் கேட்க முயன்றபோது, ’ராசாவுக்கு பால் ஊற்றிய கதையை’ மேற்கோள் காட்டி தனது வழக்கமான பாணியில் சிரிக்க வைத்தார். பதிவு துவங்கிய நாளிலிருந்து தான் comment moderation வைத்திருந்திருக்கவில்லை என்றும், தனது பதிவுக்கு வரும் அத்தனை பதிவர்களின் ஒத்துழைப்பும் அதற்கு காரணம் என்றும் கூறினார். சமீப நாட்கள் ஒன்றில் ஒரு தவிர்க்கமுடியாத சூழலில் ஒரே ஒரு நாள் CM பயன்படுத்த நேர்ந்த சம்பவத்தையும் கூறினார்.
நண்பர் உடுமலைப்பேட்டை நாகு தனக்கென தனி வலைப்பதிவு இல்லையெனினும் ஒரு தேர்ந்த வலைப்பதிவர் போலவே அனைத்து பதிவுகளையும் படித்து தெளிவாக பேசினார். பதிவு ஆரம்பித்து சில நாட்களிலேயே குங்கும்ம் வார இதழில் இடம்பெற்ற பதிவரான கெளதம் தனது பதிவுலக அனுபவங்களை பேசினார்.இந்த கூட்டம் முழுவதுமே உற்சாகம் கொப்புளிக்க கருத்துக்களை எடுத்து வைத்துக்கொண்டே இருந்தார் கலையரசன். நண்பர் செந்தில் (நட்பு வட்டாரத்தில் நோக்கியா செந்தில் என்பது இவர் பெயராம்) கொங்கு தமிழில் பேசுகிறார். சொல்ல வந்த கருத்துக்களை அவரது வலைப்பதிவில் உள்ளது போலவே அழகுற இயம்புகிறார். இந்த வலைப்பதிவர் கூட்ட்த்தினை ஒருங்கிணைத்த்தில் முன்னின்று செயல்பட்டவர் கண்ணா. ஒட்டுமொத்தமாக இந்த இளைஞர்கள் இந்த கூட்ட்த்தினை முன்னின்று நட்த்திய பாங்கும், அவர்களின் அன்பும் என்றும் மறவாதது.
கூட்டம் முடிந்து ஆசாத்பாய் அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல், அய்யனாரின் கைபேசி வழியே ஒலித்த சூபி பாடல்கள், கலீல் கிப்ரான் பற்றி அறிந்துகொண்ட தகவல்கள், துபாயில் கவ்வாலி கச்சேரிகள் என இன்னும் ஒரு முழுப்பதிவு தாங்கும் விஷயங்களுடன் இனிதே நிறைவு பெற்றது சந்திப்பு.
சந்திப்பு பற்றிய பிற பதிவர்களின் பதிவுகள்

Leave a comment