இம்தியாஸ் அலி பற்றிய எனது முதல் பதிவின் முதல் வரி, “வாழ்க்கையை ஒரு கோழி இறகைவிட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி..” என்று எழுதியிருந்தேன். ‘ஜப் வீ மெட்’ திரைப்படத்திற்கு அத்தனை அழகையும் கொண்டு வந்து கொட்டி அதனை ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையாக உருவாக்கியிருப்பது காத்ரீனா கைஃ கரீனா கபூர் அழகுற ஏற்று நிறைவாக நடித்திருக்கும் கீத் என்னும் அந்த கதாபாத்திரம்தான்.
எதைப்பற்றியுமே கவலைப்படாத, அதிகம் அலட்டிக்கொள்ளாத அந்த நொடியை நிறைவாக வாழ்வதைப்பற்றி மட்டுமே கவலைப்படும் கீத் தான் ஜப் வீ மெட் டின் உயிர் நாடி. படம் பார்த்துமுடித்தும் நம்மில் சிலருக்கு அதனை இரண்டாவது முறையும் பார்க்கத்தூண்டுமாயின் அது கீத் தின் கதாபாத்திரம் மட்டும்தான்.
தான் செய்து வந்த தொழிலில் பெருத்த இழப்பு, தன்னை காதலித்த பெண் தன்னை விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொள்ளல், தந்தையிழந்து தாயின் அரவணைப்பை தேடும் அவனின் அம்மாவோ இன்னொரு பணக்காரனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவர்களது சொந்த நிறுவனத்தின் பங்குகளை பிரித்துக்கேட்டல் என விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஆதிதய காஷ்யப் கண்போன போக்கில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு ரயில் பயணத்தில் ‘கீத்’ தை சந்திக்கிறான்.
அவளின் ஓயாத பேச்சு ஆதித்யாவை கடும் எரிச்சலுக்குள்ளாக்குகிறது, ஆனால் தவிர்க்கமுடியாதுபோன காரணங்களினால் அவளுடன் கழிய நேர்ந்த ஒரு இரவு அவனுக்கு வாழ்க்கையின் மீதான ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. நிச்சயம் அவனுக்கு நேர்ந்த துயரங்களைத்தாண்டி அவனால் வெளியே வர முடியும் என்ற எண்ணத்தை கீத் தின் நடவடிக்கைகள் உணரவைக்கின்றன. அவளுடன் அவளது சொந்த ஊரான ஒரு பஞ்சாப் கிராமத்துக்கு பயணிக்கிறான்.

அங்கு கீத் துக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் கீத் த்துக்கு அனுஷ்மன் என்கிற ஒரு நண்பன் மீது காதல். அவனுடன் சேர்ந்து வாழ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். அவளை அனுஷ்மனுடன் கொண்டு சேர்ப்பதற்காக ஆதித்யாவும் அவளுடன் சிம்லா செல்கிறான்.
கீத் வீட்டில் ஆதித்யா,கீத் துடன் ஓடிவிட்டதாக நம்பப்பட்டு துயரம் பரவ, கீத்தை சிம்லாவில் விட்டுவிட்டு தான் விட்டுவிட்ட வாழ்க்கையை செவ்வனே தொடர தனது சொந்த ஊருக்கு பயணிக்கிறான் ஆதித்யா. பெரும் தன்னம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் தனது தொழிலை, எதிரிகளை, நிறுவனத்தினை, தொழிலாளர்களை, அம்மாவை சந்திக்கிறான். இந்தியாவில் முன்னோடி செல்ஃபோன் நிறுவனமாக தனது நிறுவனத்தை கட்டமைக்கிறான்.
ஆதித்யாவின் பிரபலமான முகத்தினை பின் தொடர்ந்து அவனைக்கண்டுபிடிக்கும் கீத்தின் பெற்றோர் கீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றனர். கீத்தை தேடி மீண்டும் சிம்லாவுக்கு பயணமாகும் ஆதித்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.பிறகு நடப்பதை நீங்கள் திரையில் பார்க்கலாம்.
ஜப் வீ மெட் திரைப்படம் பார்த்தவுடனேயே அதற்கு ஒரு விவரணை கட்டுரை எழுதி அதில் இம்தியாஸ் அலியை பாலிவுட்டின் ராதாமோகன் என்ற அடைமொழியினை சேர்த்திருந்தேன். அது சற்றே சரியானதும் கூட. திரைப்படம் முழுவதிலும் பளிச்சென சில வசனங்களை மிக அழகியல் ரீதியான காட்சிகளை கோர்த்திருப்பதில்தான் இம்தியாஸ் அலியின் வெற்றி ஒளிந்திருக்கிறது.
ஆதித்யாவாக நடித்திருக்கும் ஷாஹித் கபூருக்கு தன் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ஜப் வீ மெட். இவ்வளவு அழுத்தமான கதையையும், கதாபாத்திரத்தையும் அவர் ஏற்றதே இல்லை.
அதே போல கரீனாவும், முன்பு க்ரீனா கதாநாயகி என்றால் சற்று யோசித்துதான் சிடியே வாங்குவேன். இப்படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு absolutely fabulous.
கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்!

Leave a comment