மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று வரையிலும். ராஜராஜசோழன் மீதான எனது அபிமானங்கள் அவன் அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை இம்மியளவும் குறையாமல் இருக்கிறது. என்னை அவனாகவே உருவகித்துக்கொண்டு பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் நாட்களிலெல்லாம் நான் அடையும் பெருமிதங்களுக்கு அளவே இல்லை. உளவியல் ரீதியாக இதனை விவாதித்துக்கொண்டால் வெறுமையும், கோபமும் வரும் ஆனால் அழகியல் நோக்கில் காணும்போது எல்லாமும் மறைந்த ஏகாந்தத்தை உணரமுடியும்.

இவ்வாறான உளவியல் -அழகியல் கற்பனை நிகழ்வுக்குள் மாட்டிக்கொண்டவள்தான் சுபத்ரா (சுஹாசினி மணிரத்னம்). திருவாங்கூர் மகாராஜாவின் மருமகள். அவளுக்கு மகாபாரத சுபத்ரையாக தன்னை உருவகப்படுத்திக்கொள்வதில் அலாதி பிரியம். அர்ஜுனனின் பிரேமைக்குள் மாட்டிக்கொள்ள பிரியம். தன்னையும் தூக்கிப்போக ஒரு அர்ஜுனன் வருவான் என்கிற பிரேமை. அதை நனவாக்கும் விதமாக சுபத்ராஹரணம் – கதகளி நடனம் செய்யும் ஏழைக்கலைஞனாக குஞ்ஞி குட்டன் (மோகன்லால் – Kunhi kuttan) ஒரு நிகழ்வுக்காக அரண்மனைக்கு வருகிறான் . அர்ஜுனாக கதகளி வேடம் புனைந்த அவனை நேசிக்கிறாள் சுபத்ரா. இவர்கள் இருவருக்கும் இடையே கனவுக்கும், நினைவுக்கும் உள்ள வித்தியாசங்கள் இடற குஞ்ஞி குட்டனின் மனப்போராட்டங்களில் விரிகிறது திரைப்படம்.
அழகியலும், கதை நயமும், சிறப்பான நடிப்பாற்றல் கொண்ட நடிகர்களும், தொழில்நுட்பமும் இணைந்து உருவாகியிருக்கும் அற்புதமான திரைப்படம் வனப்பிரஸ்தம் (வனவாசம்). புரிந்துகொள்ள சற்றே கடினமான கதைக்களன், கதகளி நடனங்கள் பார்த்துப் பழகியிராவிட்டால் பல இடங்களில் காட்சியில் என்ன விளக்குகிறார்கள் என்றே விளங்கமுடியாத(சப் டைட்டில்கள் உள்ள DVD உதவுகிறது) வினோதமான காட்சி அமைப்புகள், என முதன் முதலில் பார்க்கும் பார்வையாளனுக்கு சற்றே சிரமம் தரக்கூடிய விஷயங்கள் இருந்தாலும் இவ்வளவு அற்புதமான திரைப்படத்தை பார்ப்பதற்காக நாம் கொடுக்கும் சிறிய விலைகளாக அவைகளைக் கொள்ளலாம்.

முழுக்க முழுக்க கதகளி நடனத்தை ஒட்டியே திரைப்படம் எழுப்பப்பட்டிருக்கிறது. அர்ஜுனன், சுபத்ரா,அபிமன்யு ஆகியோரின் குறியீடுகளாகவோ, அல்லது அந்த கதாபாத்திரங்களின் அச்சு அசலான வண்ணத்தினையே இயக்குனர் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் மீது பூசியிருக்கிறார்.
மோகன்லால் என்ற அற்புதமான கலைஞனின் ஆகச்சிறந்த படைப்பாக நான் வனப்பிரஸ்த்தத்தை குறிப்பிடுவேன். திரைப்படத்தினை உற்று நோக்கும்போது ஒவ்வொரு சட்டத்திலும் (frame) அவரின் அனாயாசமான நடிப்பாற்றல் வெளிப்படுகிறது. ஒரு குடிகாரனாக, ஏழைக்கலைஞனாக, கதகளி நடனக்கலைஞனாக தன் தாய் தனது தந்தையை அறிமுகப்படுத்தாமலே விட்டுவிட்ட கோபக்காரனாக, ஆற்றாமையால் வெளிப்படும் கோபங்களை மிக அற்புதமான முகபாவங்களில் வெளிப்படுத்துவதாக என மிகச்சிறப்பான பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் திறமைக்கு அங்கீகாரமாக ’99 வது வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய ிருதையும், சிறந்த திரைப்பட தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
ஆனால் சுஹாசினியின் நடிப்பு மட்டும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணத்தினை திரும்ப திரும்ப பார்த்தபிறகும் தொடர்ந்து தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணம். அவரும், அவருடைய (அவருக்கு பின்னணி பேசியவரின்) குரலும் சற்றும் பொருந்தாமல் இருக்கின்றன. இன்னும் அருமையான முகபாவங்களை இன்னும் ிறந்த காட்சிகளை அவருக்காக ஒதுக்கியிருக்கலாமோ என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை ஜாகீர் ஹுசைன். தனக்கிட்ட பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார். கதகளி நடனத்தை ஒட்டிய இசை மட்டுமல்லாத மிக சிறந்த இசைக்கோர்வையையும் பின்னணியாக வைத்து பின்னப்பட்டுள்ளது. பரவலாக பின்னால் வரும் பாடல்வரிகளே காட்சியின் அமைப்பை பார்வையாளனுக்கு விரியும் விதமாகவே செல்வதால் இந்த திரைப்ப்டத்தின் சிறப்புக்கு இசையும் ஒரு முக்கிய காரணி. ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன் மற்றும் ரெனேடோ பர்டோ (Renato Berta). கதகளி நடனத்துக்கு தேவையான ஒளியையும் கதை நடந்த காலகட்டத்திற்கேற்ற ஒளியையும் நன்றாக அமைத்திருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் தாண்டி இந்த திரைப்ப்டத்தின் முழுமுதல் கதாநாயகர் இதன் இயக்குனர், ஷாஜி கருண். இவர் பிரெஞ்சு அரசாங்கம் வழங்கும் செவாலியே[(Chevalier dans ordre des arts et lettres (knight of arts and letters)] விருது பெற்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப்பெற்றவர். (மற்ற இருவர் சத்யஜித்ரே மற்றும் சிவாஜிகணேசன்). வானப்பிரஸ்தம் குறித்து இவரின் ரெடிf பேட்டி அவரது திரைப்ப்டத்தினைப்போன்றே அவ்வளவு அழகு. இங்கே.

தோற்கப்போகின்றது என்று அறிந்தே ஒரு செயலை செய்யும் ஆற்றல் வெகுவாக யாரிடத்திலும் இல்லாத காலகட்டத்தில் தனது திறமையை நம்பி இந்த திரைப்ப்டத்தினை தயாரித்த மோகன்லாலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உதயனானு தாரம் திரைப்படத்தில் சீனிவாசன், மோகன்லாலை வளைகுடா நாடுகளில் ஊறுகாய், பப்படம் வியாபாரம் செய்பவராகவும், கலைத்துறை பற்றிய கவலை இல்லாதவராகவும் சித்தரித்து சில வசனங்கள் வைத்திருப்பார் (இத்தனைக்கும் அந்த திரைப்படத்தின் ஹீரோவே மோகன்லால்தான் என்பது இதில் வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டிய விஷயம்). ஆனால் அவற்றிற்கெல்லாம் பதில் இந்த திரைப்படைத்த தயாரித்து நடித்த அவரின் செய்கையிலேயே அடங்கி விட்டது.
திரைப்படம் : வனப்பிரஸ்தம்
மொழி : மலையாளம்
வருடம் : 1999
இயக்குனர் : ஷாஜி கருண்
நடிகர்கள் : மோகன்லால்,சுஹாசினிமணிரத்னம் மற்றும் பலர்.
விருதுகள்
1999 சிறந்த நடிகருக்கான தேசிய விருது – மோகன்லால்
1999 சிறந்த திரைப்ப்டத்திற்கான தேசிய விருது – மோகன்லால்

Leave a comment