மலையாள சினிமாவின் தனித்தன்மையே அங்கு சிறந்த எழுத்தாளர்களும், ஆகச்சிறந்த இயக்குனர்களும் இணைந்து தத்தம் பணிகளை சிறப்புற செய்வதுதான் என எண்ணுகிறேன். இந்த கூட்டு முயற்சிகளில் லோகித்தாஸும், சிபி மலையிலும் சிறந்த கூட்டணி என தயக்கமின்றி சொல்லலாம். பரதமும் அவர்களின் முயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று.
இசை பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் கல்லூர் ராமநாதன் (நெடுமுடி வேணு) மற்றும் கோபிநாதன் சகோதரர்கள். மிகுந்த பாசம் மிக்க குடும்பம். அனுக்கமான சகோதரர்கள். தம்பியை சிஷ்யனாக பாவித்து அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அண்ணன். தனது தங்கையை அவனுக்கு மணம் முடிக்கும் ஆவல் கொண்ட அண்ணி (லக்ஷ்மி). அண்ணன்களின் மேல் அன்பை பொழியும் தங்கை என அழகான இசைக்குடும்பம்.
கல்லூர் ராமநாதனின் இசைவளமும், குரல் வளமும் தென்னகமெங்கும் பரவியிருக்கிறது. மிக சீரிய புலமை இருந்தாலே கர்வத்திற்கும் குறைவே இருக்காதே. அதே போன்றே மிகவும் நம்பிக்கை மிகுந்த கர்வமும் ராமநாதனிடத்தே இருக்கிறது. அவ்வப்போது மது அருந்துபவன்தான் என்றாலும் அவனுக்கு தன் பாலிருக்கும் மேம்பட்ட நம்பிக்கை அவனின் மனைவியின் பேச்சையும் கேளாது மதுப்பழக்கத்தை லேசாக வெளியிலிருந்து வீடு வரை கொண்டு வந்து விடுகின்றான்.

மது முதலில் வாயை எச்சில்படுத்தும் பின்னர் மரியாதையையும். ராமனின் குரல் மங்குகிறது. அவனுக்கு மது பழக்கமே சத்ருவாக அவனது கச்சேரிகள் அவனது தம்பியும் சிஷ்யனுமாகிய கோபிநாதனுக்கு வருகிறது. ராமனுக்கு முதலில் பொறாமையும் ஈகோவும் மேலிட தம்பியின் மேல் கோபம் வந்தாலும் தம்பியின் குரல்வளமும் இசைவளமும் தங்களின் இசை பாரம்பரியத்தினை தொடர்ந்து நிலைநாட்டும் என்ற ஆனந்தமும் அதே சமயத்தில் தன் மீதேயான கழிவிரக்கமும் அவனை துரத்த ஷேத்ராடனம் செய்வதாக சொல்லிவிட்டு குடும்பத்தை விட்டு செல்கிறான்.
அதே நேரத்தில் தங்கையின் திருமணத்திற்கு தேதி குறித்துவிட்டு அண்ணன் இல்லாமல் திருமணம் நடத்தமுடியாது என்ற எண்ணத்தில் அண்ணனை தேடிச்செல்லும் கோபிக்கு தனது பயணத்தின் வழியில் அண்ணன் இறந்த செய்தி வர தாள முடியாத துக்கத்தில் தவிக்கிறான். அண்ணன் இல்லாமலே, அண்ணன் இல்லாமல் போனதை சொல்லாமலே திருமணம் நடத்த விழைகிறான். இறுதியில் நிகழும் உணர்ச்சிப்போராட்டங்களை திரையில் கண்டாலொழிய வார்த்தைகள் சிறப்புற விளக்கும் என நான் எண்ணவில்லை.

மோகன்லால் என்ற மிகச்சிறந்த கலைஞனின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் பரதத்திற்கு தனி இடம் என்றுமே உண்டு. உணர்ச்சிக்கொந்தளிப்புகளைக் காட்ட பெரும்பாலும் இசையையும், கேமராவிற்கு முதுகு காட்டிக்கொண்டு குலுங்குவதையும் அல்லது முகத்தை மூடிக்கொண்டு அழுவதையோதான் பெரும்பாலான நடிகர்கள் செய்கிறார்கள். ஆனால் துக்கத்தையும், வேதனையும் ஒரே ஒரு முக பாவத்தில் கொண்டுவர மோகன்லாலால் சிறப்பாக முடிகிறது. அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று அவரது performance படம் நெடுக சொல்ல்லிக்கொண்டே இருக்கிறது.
லோகித்தாஸ் என்கிற இயக்குனனை விட அவனது பண்பட்ட கதைகள் பல இன்னும் மனதை விட்டு அகலாமலே இருக்கின்றன. வித்தியாசமாக செய்ய வேண்டுமென்பதற்காகவே கதையையும் கதாபாத்திரங்களையும் அந்தகாரங்களிலும், கானகங்களிலும் தேடிக்கொண்டிருக்கும் கதை ஆசிரியர்களைத் தாண்டி அன்றாட நிகழ்வுகளினூடே இருக்கும் ஆகச் சிறந்த கதை நாயகர்களை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் லோகித்தாஸுக்கு முதல் சலாம். கதை ஆசிரியனின் போக்குக்கு ஒத்தவாறே இயக்க வேண்டும் என்பதனை எழுதாத கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கும் சிபிமலையிலுக்கு அடுத்த சலாம்.
ரவீந்திரனின் இசை இன்னும் இரண்டு படிகள் திரைப்படத்தை உயர்த்துவதாக தோன்றுகிறது. இசை எனப்படுவது சந்தோஷக் காட்சிகள் வந்தால் கோரஸ் சத்தங்களும் சோக காட்சிகள் வந்தால் நாதஸ்வரங்களோ, க்ளாரினட்டோ அலறதலோ கிடையாது என்பதை மிக அழுத்தமாக இந்த திரைப்படமும் நிரூபித்திருக்கிறது.
திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்க இங்கே செல்லவும்.
திரைப்படத்தில் தங்களின் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கும் அத்தனை பேருக்குமே இந்த திரைப்படத்தின் வெற்றியில் பங்கிருக்கிறது. குறிப்பாக நெடுமுடிவேணு. இவ்வளவு நடிப்பையும் எப்படி தன்னகத்தே வைத்திருந்தும் எப்படி முற்றிலும் அடக்கமாக இருக்க முடிகிறது அவரால். Wonderful performance.
இந்த திரைப்படத்திற்காக மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், யேசுதாசுக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கின்றன.
திரைப்படம் : பரதம் (மலையாளம்)
நடிகர்கள் : நெடுமுடி வேணு, மோகன்லால்,லக்ஷ்மி, ஊர்வசி மற்றும் பலர்
இசை : ரவீந்திரன்.
கதை,திரைக்கதை : A.K.லோகித்தாஸ்
இயக்கம் : சிபி மலையில்
பின்குறிப்பு : சீனு என்று தமிழில் கார்த்திக்,வாசு நடித்து விவேக் காமெடிக்கு மட்டுமே பெயர் போன படம் இந்த திரைப்படத்தை தழுவியது.

Leave a comment