இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி பதிவு செய்வது அவசியமாகிறது.
அது ஒரு அழகிய மழைக்காலம். நகரெங்கும் மழை தனது அடையாளங்களை மும்பை நகரெங்கிலும் இரைச்சலுடன் பதிவு செய்து கொண்டே இருக்கிறது. போகும் பாதையெங்கிலும் நிழலென தொடர்ந்து வரும் மழை தன் பாதையினூடே நிராகரிப்புகளை தங்களின் அன்றாட வாழ்வின் பகுதியென சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை அடையாளம் கண்டவாறே நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னதான் வாழ்வு எந்திரமயமாகிவிட்டாலும் அன்பையும், காதலையும் ஏற்று பழகிவிட்ட மனது நிராகரிப்பின் வலிகளை ஒருபோதும் சுமக்க விரும்புவதே இல்லை.

ஷீகா(ஷில்பா ஷெட்டி) – அழகு திறமை அளவில்லாத அன்பு என மிகுந்த உற்சாகத்துடன் வாழ்வியலில் திளைக்க விழைந்தவளுக்கு முற்றிலும் அன்பில்லாத திருமணமும், அவளின் கணவன் ரஞ்சித்தின் அன்பின்மையும் நிராகரிப்பும் ஆழ்ந்த வலியை அளிக்கின்றன. 5 வயது குழந்தைக்கு தாயான பின்பும், அவளின் அன்பற்றுப்போன குடும்ப வாழ்வின் வலியின் துவள்கிறவள். அவளது அலைபேசி மணி கூட “தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே, மான்போல வந்தவனே யாரடிச்சாரோ..” என்று சோக கீதம்தான் இசைக்கிறது. (ஆம் தமிழ்-இளையராஜா பாடல்தான்!)
ரஞ்சித்(கேகே மேனன்) – ஷீகாவின் கணவன். நகரின் முக்கியமான பெரிய கால்சென்டரின் முதன்மை நிர்வாக அதிகாரி. களைப்பும், அழுத்தமும், பணிப்பளுவும் அவனின் குடும்பத்தினை விட மற்ற வெளி விவகாரங்களில் – களிப்புகளில் நேரம் செலவிடும் கனவான். தனது மகளின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தாலும் முற்றிலுமாக தனது மனைவியை வெறுக்கிறான்.
நேஹா(கங்கனா ரெனெட்) – ரஞ்சித்தின் அலுவலத்திலும், வாரத்தின் சில நாட்களை அவனது படுக்கையிலும் பங்கு கொள்ளும் அழகுச்சிலை. ரஞ்சித் விரும்புவது தன்னையல்ல, அவனது களைப்பைப் போக்க உதவும் தனது உடல் கிளர்ச்சி மட்டுமே என்பதனை உணர தொடங்கும்போது அவள் நிராகரிப்பின் வலிகளை உணரத்துவங்குகிறாள்.
ராகுல்(ஷர்மான் ஜோஷி) – நேஹாவை ஒருதலையாக காதலிக்கும் ராகுல். பணம் சம்பாதிப்பதற்காக எந்த தீர்க்கமான எல்லை வரையிலும் போகக்கூடிய கதாபாத்திரம் – தனது அபார்ட்மெண்டில் சில முன்னிரவுகளை தனது உடனடி சீனியர்களின் சல்லாபத்திற்கு அனுமதிக்கும் எல்லை வரை கூட – ஆனால் நேஹாவிடம் அவன் கொண்டிருக்கும் அன்பு, அவளின் களங்கப்பட்ட ஒருபாதியை அறிந்த பிறகும் கூட குறையாமல் தொடர்கிறது.
ஷ்ருதி (கொன்கனாசென் ஷர்மா) – ஷீகாவின் தங்கை – தான் முப்பது வயது கடந்து விட்டாலும் தான் இன்னமும் ஒரு கன்னியாகவே (virgin) இருப்பதில் பெரும் கவலை அவளுக்கு. தனக்கு ஏற்ற துணையினை நகரெங்கும் தேடிக்கொண்டே இருப்பவள். தான் காதலிக்கும் தனது அலுவலக மேலாளன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை அறிந்து துவள்கிறாள். திருமணம், கலவி போன்ற எல்லா இயல்பான விஷயங்களையும் அளவுக்கு அதிகமான உயரத்தில் வைத்து பார்த்து, தன்னை நிராகரிப்பு சூழ்ந்து இருப்பதாக கவலை கொள்கிறாள்.
ஆகாஷ்(ஷைனி அஹுஜா) : தனது மோசமான மண வாழ்க்கை தந்த சோகங்களின் தாக்கம் விரட்ட ஷீகா ஆகாஷினால் ஈர்க்கப்படுகிறாள். ஆகாஷ் ஒரு வளர்ந்து வரும் கலைஞன். மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டவன். ஆனால் எத்தனைதான் சிறப்பாக இருந்தாலும் வணிகப்பரப்பில் அவன் ஒரு களையாகவே மதிக்கப்படுகிறான். மொத்தம் 5 பேர் உட்கார்ந்திருக்கும் ஆகாஷின் ஒரு மேடை நாடத்தின் காட்சியின்போது பார்வையாளர் ஒருவரின் அலைபேசியில் வரும் அழைப்பு மணி கூட “who puts the dogs out” என்று பாடுகிறது.
மோன்டு(இர்பான் கான்) : 38 வயது இளைஞன் – திருமணமாகாமல் பெண் தேடிக்கொண்டிருப்பவன். ஷ்ருதியை காதலிப்பவன். முதலில் அவனை வெறுக்கும் ஷ்ருதி பின்னர் அவன் அன்பை புரிந்து கொள்கிறாள்.
இவர்களை தாண்டி ஷிவானி(நபீஸா அலி), அமோல்(தர்மேந்திரா) என்கிற இளவயதில் காதல் தோல்வியுற்று முதிய வயதில் இணையும் தம்பதிகள் இரண்டு பேர் கதாபாத்திரமும் உண்டு.

* திரைப்படத்தின் முதுகெலும்பாக நான் கருதுவது குறியீடுகளாய் அமைந்த எல்லா காட்சிகளுமே
* மிகவும் கோர்வையாக,அழகாக, காட்சிகளுக்கும் மொத்த திரைப்படத்தின் கருத்துக்களுக்கும் ஒத்துப்போகும்படி எழுதப்பட்ட வசனங்கள். (என்னுடைய பலகீனமாக ஹிந்தியால் நிறைய இடங்களில் சிரமப்பட்டேன்.)
* மும்பையின் வழக்கமாக சினிமாக்களில் காட்டப்படும் இடங்களை விடுத்து வித்தியாசமான இடங்களில் ஒளிப்பதிவு செய்திருப்பது.
* இசை. மிகவும் நல்ல பாடல்கள். கதாபாத்திரங்களை பாட விடாமல், அவர்களின் சூழ்நிலைகளுக்கேற்ப இசையமைப்பாளர் ப்ரீத்தமுடன் இன்னும் இரண்டு இசைக்கலைஞர்களும் இணைந்து நிகழ்த்தும் இசைக்கச்சேரி. பலே!
* படம் முழுவதும் மனதை நிறைக்கும், கொள்ளை கொள்ளும் மழை.
* சில வியாபார தேவைகளுக்காக சமரசம் செய்து கொண்ட உச்சகாட்சியை ஒட்டி வரும் காட்சிகள் தவிர திரைப்படம் முழுவதுமே மிகவும் திருப்தியாக இருந்தது
* அத்தனை கதாபாத்திரங்களிலும் மிகவும் திருப்தியாக இருந்தது கொன்கனாசென், இர்பான் கான் ஜோடிதான். what a performance? முழுமையான திருப்தி கிடைப்பது இது போன்ற திரைப்படங்களில்தான். பாருங்கள்.
Life in a Metro
Director : Anurag Basu
Music : Pritam
Cinematography :Bobby singh
Dialogues : Sanjeev dutta
Editor : Akiv Ali

Leave a comment