
வெளிச் சொல்லமுடியாத
வெக்கைகளின் வெளிகளில்
பற்றியெறிகின்றன என்
பச்சை தாவரங்கள்
சுயங்களின் முனை முறிவுகளில்
தடவப்பட்ட பிரியக்களிம்புகள்
என்றென்றும் ஆற்றுவதில்லை
புரையோடிப்போன
மனக்காயங்களை
இருள் நிறைந்த பாதைபோல
ஒளியற்றுப்போகிறது
வாழ்க்கை
சில நேரங்களில்
ஆங்கே ஒட்ட வைத்த
மெழுகு போல உன் பிரியங்கள்
அவ்வப்போது என்னை ஆற்றுமாயினும்
வழியற்றுத் திரிகின்றன
என் விழிப் பட்டாம்பூச்சிகள்
காலங்களின் வழிதெரியா
ஒற்றையடிப்பாதையின் வழியே
வழிந்தோடிக்கொண்டிருக்கிறது
என் பிரியங்களின் ஆழ்நதி
என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற
நம்பிக்கையில் நானும்
என் பிரியங்களும்
உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்.

Leave a comment